| ADDED : டிச 29, 2025 05:15 AM
திருப்பூர்: திருப்பூர் சக் ஷம் அமைப்பு சார்பில், ஐந்தாவது மாவட்ட மாநாடு; உலக மாற்றுத்திறனாளர்கள் தின விழா திருப்பூரில் நேற்று நடந்தது. சாய் கிருபா மற்றும் துவாரகா சிறப்பு பள்ளி குழந்தைகளின் நாட்டியம், கலை நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட தலைவர் ரத்தினசாமி வரவேற்றார். 'சக்ஷம்' அமைப்பின், தேசிய ஆலோசகர் ஆடிட்டர் ராமநாதன் பேசுகையில், ''சிறப்பு குழந்தைகள் இறைவனின் படைப்பில் சிறப்பு வாய்ந்தவர்கள்; அனைவருக்கும் மேலானவர்கள். யார் உண்மையிலே மனிதர்கள் என்று பார்த்தால், இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த குழந்தைகள் தான்; இவர்கள் வாழும் மகான்கள். ஒவ்வொரு குழந்தையையும், ஸ்தாபனம், நிறுவனம் என, யாராவது தத்து எடுத்து கொண்டால், ஒவ்வொரு குழந்தைகளின் தேவையை பூர்த்தி செய்ய முடியும்'' என்றார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார் பேசுகையில், ''மாற்றுத்திறனாளிகளின் தேவைக்கு அரசு மட்டுமே அனைத்தும் செய்ய இயலாது. சக் ஷம் போன்ற அமைப்புகளின் பங்கும் உண்டு'' என்றார். மாநில செயலாளர் மயில்சாமி, 'சைமா' தலைவர் சண்முக சுந்தரம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல துறை இளநிலை மறுவாழ்வு அலுவலர் குழந்தைசாமி, அரசு மருத்துவக்கல்லுாரி மனநல உதவி பேராசிரியர் கலைசெல்வி, மாநில இணை பொருளாளர் கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக, காலையில் ராயபுரம் பூங்காவில் இருந்து புறப்பட்ட மாற்றுத்திறனாளர்களின் வாகன ஊர்வலம் நடந்தது. துணை மேயர் பாலசுப்ரமணியம் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.