| ADDED : நவ 21, 2025 06:23 AM
திருப்பூர்: 'திருக்கார்த்திகை தீபத்திருவிழாவுக்கு பக்தர்கள் சென்று வர ஏதுவாக, கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும்,' என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோவில் உள்ளது. பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக உள்ள இக்கோவிலில், கார்த்திகை தீபத்திருவிழா, 24ம் தேதி துவங்குகிறது. டிச. 3ம் தேதி, மலைஉச்சியில் மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. தமிழகம் முழுதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு செல்வர். விழுப்புரம் - காட்பாடி வழித்தடத்தில் திருவண்ணாமலை ரயில்வே ஸ்டேஷன் உள்ளது. கோவை, ஈரோடு, சேலத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு நேரடி ரயில் இல்லை; கடந்து செல்லும் ரயில்களும் இல்லை. காட்பாடி, ஜோலார்பேட்டை வழியில் திருவண்ணாமலைக்கு ரயில்கள் இயங்குகிறது. மேற்கு மண்டல மாவட்டங்களில் இருந்து செல்ல விரும்பினால், காட்பாடி சென்று அங்கிருந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. வரும், 24ம் தேதி தீபத்திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சி துவங்குகிறது. டிச. 3ல் மகா தீபம் ஏற்றப்படுகிறது. பத்து நாட்களும் திருவண்ணாமலைக்கு செல்லும் பக்தர்கள் வசதிக்காக சென்னை, விழுப்புரத்தில் இருந்து சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட உள்ளது. இப்பட்டியலில், கோவை - திருவண்ணாமலை ரயிலை சேர்க்க வேண்டும். திருப்பூர், ஈரோடு, சேலம் ஸ்டேஷன்களில் நின்று செல்லும் வகையில் சிறப்பு ரயில் அறிவிக்க வேண்டும் என பக்தர்கள் விரும்புகின்றனர். கடந்த பத்து ஆண்டுகளுக்குள் கோவையில் இருந்து திருப்பதி, ராமேஸ்வரம், மதுரை இயக்கப்பட்ட வாராந்திர சிறப்பு ரயில்கள் பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. எனவே, கோவை - திருவண்ணாமலை இடையேயும் சிறப்பு ரயில் இயக்க வேண்டும். டிக்கெட் முன்பதிவுக்கு ஏற்ப, ரயில் இயக்கத்தை நீட்டிக்க வேண்டுமென பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.