| ADDED : ஜன 01, 2024 12:10 AM
திருப்பூர்:அயோத்தி ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி, திருப்பூரில் ஹிந்து அமைப்பினர் வீடுகள் தோறும் சென்று அழைப்பிதழ், அட்சதை வழங்கி அழைப்பு விடுத்து வருகின்றனர்.அயோத்தி ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேகம் பிரமாண்டமாக வரும் ஜன., 22ம் தேதி நடக்கிறது.விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் சிறப்பு பூஜை நடத்திய பின், கும்பாபிேஷகத்திற்கான அட்சதை அரிசியை, பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பினர். தமிழகம் வந்த அட்சதை அரிசி, மாவட்டம் வாரியாக பிரித்து அனுப்பப்பட்டது.கடந்த ஒரு மாதமாக மக்களுக்கு அட்சதை அரிசியை வழங்கும் வகையில், சிறிய பாக்கெட்டில் 'பேக்' செய்யும் பணி நடந்தது. இப்பணிகள் தற்போது நிறைவு பெற்று, அழைப்பிதழுடன் அட்சதை அரிசி வழங்கி மக்களுக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர்.ஹிந்து முன்னணி, விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நேற்று முதல் ஒவ்வொரு பகுதியாக வீடு வீடாக சென்று விழா அழைப்பிதழ், கோவில் படம், ஸ்ரீராமர் படம் அச்சிடப்பட்டுள்ள சிறிய பாக்கெட்டில் அட்சதை ஆகியவற்றை வழங்கி விழாவுக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர்.திருப்பூர் தட்டான்தோட்டத்தில் ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தலைமையில் நிர்வாகிகள் மத பேதமின்றி அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து அழைப்பு விடுத்து வருகின்றனர். இடுவம்பாளையத்தில், விஸ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் இப்பணியை மேற்கொண்டனர்.l அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற வேண்டும் என்பதற்காக, பல்லடம் வடக்கு ஒன்றிய பா.ஜ., சார்பில், சிறப்பு பூஜை ஏற்பாடு செய்யப்பட்டது.பல்லடம் அடுத்த, அல்லாளபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஒன்றிய தலைவர் பூபாலன் தலைமை வகித்தார். மாவட்ட சிந்தனையாளர் பிரிவு தலைவர் குப்புராஜ், ஹிந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் குரு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முன்னதாக, அயோத்தி ராமர் கோவிலின் புகைப்படம், அட்சதை மற்றும் அழைப்பிதழ் ஆகியவை பெருமாள் பாதங்களில் வைத்து பூஜிக்கப்பட்டது. தொடர்ந்து, சிறப்பு வழிபாடுகள் நடந்தன.