உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  ஸ்ரீசத்ய சாய்பாபா நுாற்றாண்டு விழா கோலாகலம்

 ஸ்ரீசத்ய சாய்பாபா நுாற்றாண்டு விழா கோலாகலம்

திருப்பூர்: பகவான் ஸ்ரீசத்ய சாய்பாபா நுாற்றாண்டு பிறந்த நாள் விழாவையொட்டி திருப்பூர் நல்லுாரில் நேற்று புதிய பல்லக்கில், ஸ்ரீசத்ய சாய்பாபா திருவீதியுலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ஒரு வாரம் நடந்த விழா, இன்றுடன் நிறைவு பெறுகிறது. சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் பரவியுள்ள ஸ்ரீசத்ய சாய்பாபா பக்தர்கள், அவரது நுாற்றாண்டு பிறந்த நாள் விழாவை சிறப்பான முறையில் கொண்டாடிவருகின்றனர். திருப்பூரில் உள்ள பக்தர்கள் கடந்த ஒரு வாரமாக பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்தி வருகின்றனர். திருப்பூர் மாவட்ட ஸ்ரீசத்ய சாய் சேவா நிறுவனம் சார்பில், பி.என். ரோடு ராம் நகரில் உள்ள ஸ்ரீசத்ய சாய் சேவா மந்திர் வளாகத்தில் இந்நிகழ்ச்சி கடந்த 16ம் தேதி துவங்கியது. இதையொட்டி தினமும் அதிகாலை 5:00 மணிக்கு ஓம்காரம்; சுப்ரபாதம் நிகழ்வும் அதையடுத்து நகர சங்கீர்த்தனம் நிகழ்ச்சி நடைபெற்றது. அதே போல் தினமும் மாலை 5:00 மணிக்கு ருத்ரபாராயணம்; மாலை 6:00 மணிக்கு சிறப்பு பஜன் மற்றும் மங்கள ஆரத்தியும் பக்திச் சொற்பொழிவு ஆகியனவும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளின் இடையே, ரத்த தான முகாம்; திருவிளக்கு பூஜை, சகஸ்ரநாம பாராயணம் மற்றும் மாணவர்கள் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. மரக்கன்று நடவு விழாவில் நேற்று காலை ஓம்காரம், சுப்ரபாதம் மற்றும் நகர சங்கீர்த்தனம் நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, பிரேம தரு என்ற தலைப்பில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு மண்டலிகள் சார்பில் மொத்தம் 4600 மரக்கன்றுகள் நடப்பட்டன. இப்பணியில், ஸ்ரீசத்ய சாய் சேவா நிறுவன உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் செயல்படும் ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் காப்பகங்களுக்கு அமைப்பினர் சென்று சேவை செய்தனர். நாராயண சேவை இன்று நடைபெற உள்ள நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருவோருக்கு அமுது வழங்கப்படுகிறது. இதற்காக அமுது தயாரிக்கும் பணி நேற்று திருப்பூர் ராம் நகர் மண்டல் சாய் மந்திர் வளாகத்தில் நடந்தது. இதில் ஸ்ரீசத்ய சாய் சேவா அமைப்பினர் பங்கேற்று சேவை செய்தனர். புதிய பல்லக்கு துவக்கம் திருப்பூர் நல்லுார் பஜனா மண்டலியில் நேற்று மாலை சிறப்பு ருத்ர பாராயணம் நடந்தது. தொடர்ந்து அங்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுவாமிகள் வலம் வரும் பல்லக்கு அமைக்கப்பட்டுள்ளது. அதை சேவா அமைப்பின் மாவட்ட தலைவர் உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர். பல்வேறு முக்கிய வீதிகள் வழியாக பல்லக்கில் ஸ்ரீசாய்பாபா திருவீதியுலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதையடுத்து சிறப்பு பஜன் மற்றும் மங்கள ஆரத்தி நடைபெற்றது. இன்று நிறைவு ஸ்ரீசத்ய சாய் பாபா நுாற்றாண்டு பிறந்த நாள் விழாவின் ஒரு வார கொண்டாட்டங்கள் இன்றுடன் நிறைவடைகிறது. இன்று காலை ஓம்காரம் நிகழ்வுகளைத் தொடர்ந்து கணபதி ேஹாமம், மிருத்யுஞ்சய ேஹாமம், பிரசாந்தி கொடியேற்றம் நிகழ்ச்சிகள் காலையில் நடக்கிறது. அதையடுத்து வீல் சேர் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அதன்பின் சிறப்பு நாராயண சேவை காலை 11:00 மணி முதல் நடக்கிறது. மாலை 4:00 மணிக்கு விநாயகர் கோவிலிலிருந்து சுவாமி புறப்பாடு; 5:00 மணிக்கு சிறப்பு பஜன், சாய்ஸ்ருதி பள்ளி மாணவர்கள் கலை நிகழ்ச்சி நடக்கிறது. நிறைவாக மகா மங்கள ஆரத்தி, பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ