இம்மாத இறுதிக்குள் வரிவசூல்; உள்ளாட்சி நிர்வாகங்கள் வேகம்
திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில் வரி வசூலில் ஊராட்சிகள் தீவிரம் காட்டுகின்றன.வரி வசூலுக்கு சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது:சொத்து வரி, வணிக வளாக வரி, குடிநீர் கட்டணம், உரிம கட்டணம் உள்ளிட்ட வரி பாக்கிகளை வசூல் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம். பொதுமக்கள் வீட்டில் இருந்து 'ஆன்லைன்' வாயிலாக வரி செலுத்தும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது.இதை பொதுமக்களுக்கு தெரியும் வண்ணம் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த அறிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. இம்மாதம், 31ம் தேதிக்குள் வரி வசூல் செய்து, முழுமையாக முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.வரி பாக்கி அதிகம் உள்ளவர்களுக்கு ஏற்கனவே நோட்டீஸ் வாயிலாக எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. வரி பாக்கிகளை அலுவலகத்திற்கு நேரில் வந்து கட்டி முடிக்காதவர்கள், அந்தந்த பகுதியில் உள்ள இ-சேவை மையங்களுக்கு சென்று, ஆன்லைன் வாயிலாக வரிகளை செலுத்தலாம்.வரி செலுத்தாதவர்களின் வீடு, நிறுவனம் ஆகியவற்றில் குடிநீர் குழாய் துண்டிப்பு, ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.