திருப்பூர்;'திருப்பூர் உள்ளூர் திட்டப்பகுதிக்கான முழுமைத் திட்டம் தொடர்பான ஆட்சேபனை, ஆலோசனைகளை தெரிவிக்கலாம்' என, மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.மாவட்ட கலெக்டர்கிறிஸ்துராஜ் அறிக்கை:திருப்பூர் மாநகராட்சி, 2 நகராட்சிகள், 3 பேரூராட்சிகள் மற்றும், 54 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கி, 1,031.66 சதுர கி.மீ., பரப்பளவுடன் கூடிய திருப்பூர் உள்ளூர் திட்டப்பகுதிக்கான முழுமைத் திட்டத்திற்கு, அரசு, அனுமதி தெரிவித்துள்ளது; இது, அரசிதழில் வெளியாகியுள்ளது.நகர ஊரமைப்பு சட்டம் 1971, பிரிவு, 26 (1)ன் படி, முழுமை திட்டத்தால் பாதிக்கப்பட்ட எந்தவொரு நபரும், தமிழ்நாடு அரசிதழ் அறிவிக்கை வெளியிடப்பட்ட நாளில் இருந்து, 2 மாதத்துக்குள் முழுமைத் திட்டம் தொடர்பான ஆட்சேபனை மற்றும் ஆலோசனை தெரிவிக்கலாம்.இதற்கு வசதியாக முழுமைத் திட்டம் தொடர்பான திட்ட அறிக்கை, வரைபடம் மற்றும் நில உபயோக அட்டவணை ஆகிய ஆவணங்களை, முழுமைத் திட்டத்திற்காக துவங்கப்பட்டுள்ள http://tiruppurlpa.comஎன்ற இணையதள முகவரி வாயிலாக பதிவிறக்கம் செய்து, தங்களின் ஆட்சேபனை, ஆலோசனைகளை, 'உறுப்பினர் செயலர், திருப்பூர் உள்ளூர் திட்டக்குழுமம், முதல் தளம், குமரன் வணிக வளாகம், ரயில் நிலையம் அருகில், திருப்பூர்' என்ற முகவரிக்கு நேரிலோ, எழுத்துப்பூர்வமாகவோ, இணைய தளம் வாயிலாகவோ அனுப்பி வைக்கலாம்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.