திருப்பூர்: திருப்பூர் அருகே பிடிபட்ட போலி டாக்டர், மனைவி, மகள் என குடும்பமே சேர்ந்து வீட்டில் மருத்துவம் பார்த்து வந்தது, மருத்துவ பணிகள் இணை இயக்குனர் விசாரணையில் தெரியவந்துள்ளது. மருத்துவ படிப்பு முடிக்காமல், வீட்டில் ஒருவர் மருத்துவம் பார்த்து வருவதாக, திருப்பூர் கலெக்டருக்கு, புகார் வந்தது. இது குறித்து கலெக்டர் உத்தரவின்பேரில், மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் குழுவினர், 21ம் தேதி, தாராபுரம் - குண்டடம் வழியில் உள்ள, முத்தையன்பட்டியில், விநாயகா மெடிக்கல்ஸில், ஆய்வு மேற்கொண்டனர். அங்கிருந்த வெள்ளைச்சாமி, 50 என்பவர், நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்த போது, இணை இயக்குனரிடம் பிடிபட்டார்; குண்டடம் போலீசாரிடம் அவரை மருத்துவக்குழுவினர் ஒப்படைத்தனர். இது குறித்து, மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் மீரா கூறியதாவது: வீடு அருகே உள்ள, மருந்தகத்துக்கு லைசன்ஸ் வாங்கியுள்ளார். பிளஸ் 2 மட்டும் முடித்து விட்டு, பார்மசிஸ்ட் ஒருவரை வேலைக்கு வைத்துள்ளார். அவர் பணிக்கு வராத நேரங்களில், 10ம் வகுப்பு வரை படித்த ஒரு பெண் மருந்து விற்பனைக்கு இருந்துள்ளார். மருந்தகம் அருகே, இவரது வீட்டுக்குள் மூன்று கட்டில்கள் போட்டு, ரகசியமாக மருத்துவமனை நடத்தியுள்ளார். இவரது மனைவி வில்ஸி, செவிலியராக பணியாற்றியது தெரிய வந்தது. வீட்டுக்குள்ளேயும், மருந்தகம் வழியாகவும் உள்ளே சென்று, சிகிச்சை எடுத்துக் கொள்ள தனி வழி உள்ளது. விசாரணையின் போது வெளிநாட்டில் ஒரு மகள் மருத்துவம் படிக்கிறார்; இளைய மகள் பார்மஸி படிப்பு முடித்துள்ளதாக கூறுகிறார். விசாரித்தால் அவர்களிடம் அதற்கான ஆவணங்கள் இல்லை. மனைவி, மகள் வீட்டுக்குள் மருத்துவமனையை நடத்த இவருக்கு உதவியுள்ளனர். மருத்துவமனை போல், டாக்டர் இருக்கை, ஸ்டாப் நர்ஸ்க்கு தனியிடம், ஊசி செலுத்துமிடம் வைத்துள்ளனர். தினமும், 25 - 35 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார். அனுபவ, ஸ்பெஷாலிட்டி டாக்டர்கள் மருத்துவமனைகளில் பரிந்துரைப்பது போன்ற வீரியமிக்க மருந்துகளை (மருந்தகம் லைசன்ஸ் இருப்பதால்) கொள்முதல் செய்து, நோயாளிகளுக்கு பரிந்துரைத்துள்ளார். தொடர் விசாரணைக்கு பின் பிற விவரங்கள் தெரிய வரும். இவ்வாறு, அவர் கூறினார். 'அனுபவம்' வைத்தியமாகுமா? விசாரணையின் போது மருத்துவ அலுவலர்களிடம் வாதிட்ட வெள்ளைச்சாமி,'நான் பிரைவேட் ரூரல் மெடிக்கல் பிராக்டிஸ்னர்ஸ் அசோசியேஷன் ஆப் தமிழ்நாடு என்ற சங்கத்தின் ஆயுள்கால உறுப்பினர். மருத்துவம் பார்ப்பதற்கு கோர்ட் ஆர்டர் வாங்கி வைத்துள்ளேன். பெங்களூரு உள்ள இன்ஸ்டியூட்டில் ஐந்து ஆண்டு படிப்பு படித்துள்ளேன். பத்தாண்டாக மருத்துவ சேவை செய்து வருகிறேன். அனுபவத்தில் டாக்டர் ஆனேன்,' என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால், பிளஸ் 2 முடித்ததை தவிர அவரிடம் எந்த ஆவணங்களும் இல்லாததால், சிக்கிக் கொண்டார்.