திருப்பூர்:திருப்பூர் தெற்கு போலீஸ் ஸ்டேஷன் சிக்னல் அருகே எஸ்.டி.பி.ஐ., கட்சியினர் மதுரையில் நடக்கும் மாநாடு தொடர்பாக பிளக்ஸ் பேனர் வைத்தனர்.போலீசார் அறிவுறுத்தலின் பேரில், பேனர் அகற்றினர். அந்த இடத்தில், ராமர் கோவில் கும்பாபிஷேகம் தொடர்பான பேனரை, திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., வினர் வைத்தனர்.இதையறிந்து, எஸ்.டி.பி.ஐ., கட்சியினர், பேனரை அகற்ற வலியுறுத்தி, தாங்களும் வைப்பதாக தெரிவித்தனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, திருப்பூர் தெற்கு துணை கமிஷனர் வனிதா, உதவி கமிஷனர்கள் உள்ளிட்ட போலீசார் விரைந்து சென்று பேச்சு நடத்தினர்.பேனர் தொடர்பாக, இருதரப்புக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசார் அறிவுறுத்தலின் பேரில், பா.ஜ., வினர் பேனரை அகற்றிய சில நிமிடத்தில், எஸ்.டி.பி.ஐ., கட்சியினர் மீண்டும் பேனர் வைத்தனர். இதனால், போலீசாரிடம் பா.ஜ.,வினர் வாக்குவாதம் செய்தனர்.அகற்றிய பேனரை, சி.டி.சி., கார்னரில் வைப்பதாக கூறி பா.ஜ.,வினர் எடுத்து சென்றனர். அவர்களை போலீசார் தடுத்த போது, தள்ளமுள்ளு ஏற்பட்டது. பேனரை பறிமுதல் செய்தனர். இதனால், போலீசாரை கண்டித்து, பா.ஜ., வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.மறியலில் ஈடுபட்ட, 18 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர். எஸ்.டி.பி.ஐ., யினரிடம் போலீசார் பேச்சு நடத்தினர். அதற்கு பின், பேனரை அகற்றி கொண்டனர்.