| ADDED : ஜன 11, 2024 07:10 AM
திருப்பூர் : திருப்பூர் பகுதியில் நேற்று மழை பெய்யும் என அறிவிக்கப்பட்ட நிலையிலும், பகல் முழுவதும் மழை இல்லை. இருப்பினும் தொடர்ந்து இரு நாட்களாக பனிப் பொழிவு குறையாமல் காணப்பட்டது.தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த வாரம் முதல் தொடர்ந்து மழை பரவலாகப் பெய்து வருகிறது. திருப்பூர் மாவட்டத்திலும் கடந்த வாரத்தில் சில நாட்கள் லேசான துாறல் மழை பெய்தது.நேற்று முன்தினம் காலை முதல் மாலை வரை, இடைவெளியின்றி மழை பெய்தபடி இருந்தது. வானிலை ஆய்வறிக்கையில், மேலும் சில மாவட்டங்களில் மழை தொடரும் எனவும், திருப்பூர் மாவட்டத்திலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.திருப்பூர் பகுதியில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து வானம் மேக மூட்டத்துடனும், சில நேரங்களில் லேசான மழையும், சில சமயம் கன மழையும் பெய்தது. வெயில் காணப்படவில்லை.இந்நிலையில் நேற்று காலை முதல் வெயில் காணப்பட்டது. மழை பெய்யவில்லை. இருப்பினும் தொடர்ந்து பனிப்பொழிவு குறையாமல் உள்ளது. இரவு முதல் காலை நீண்ட நேரம் வரையிலும் பல பகுதிகளிலும் பனிப் பொழிவு அதிகம் காணப்பட்டது.தொடர்ந்து குளிர் காற்றும், ஈரப்பதமான சீதோஷ்ண நிலையும் நீடித்தது. பனிப்பொழிவு மற்றும் குளிர் காற்று காரணமாக இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் பலரும் ஸ்வெட்டர், மப்ளர், மங்கி குல்லா,காதுகளுக்கு மப்ளர் என அணிந்தபடி காணப்பட்டனர்.