உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மெய் ஞானமாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே... 70 அடி உயர தீபஸ்தம்பத்தில் ஒளிரும் ஒளிச்சுடரே!

மெய் ஞானமாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே... 70 அடி உயர தீபஸ்தம்பத்தில் ஒளிரும் ஒளிச்சுடரே!

ஹிந்து கோவில்களில், தீப ஸ்தம்பம் என்று அழைக்கப்படும் விளக்குத்துாண் கட்டாயம், கோவில் முன்பாக காட்சியளிக்கும். முகத்துக்கு கண் இருப்பது போல், கோவில் கட்டடக்கலையில், தீப ஸ்தம்பம் அமைப்பது மிக முக்கியமாக கருதப்படுகிறது.விளக்குகளில் இருந்து வரும் ஒளி, அறிவியன் ஆன்மிக ஒளி; அறியாமை எனும் இருளை அகற்றும். அதேபோல், தீப ஸ்தம்பம் என்பது, பிரபஞ்சத்தின் சுழலும் அண்டத்துாண் என்று நம்பப்படுகிறது. மின்சார விளக்குகள் கண்டறியப்படாத காலத்தில், கோவில்களின் முன்பாக இருக்கும் தீப ஸ்தம்பங்களில், தினமும் மாலையில் விளக்கு ஏற்றி, இருளை போக்கினர். இந்த கட்டமைப்பு, அருள்மழை பொழிவும் கோவிலுக்கே ஒளி கொடுக்கும் சக்தி வாய்ந்தது என்றும் பக்தர்கள் நம்புகின்றனர்.கிழக்கு நோக்கிய நிலையில், நல்லாற்றின் தென் கரையில் உள்ள அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலின் அடையாளமே, வானுயர காட்சியளிக்கும் ராஜகோபுரங்களும், அதற்கு முன்பாக உள்ள தீப ஸ்தம்பமும் தான். இக்கோவிலின் முன்பாக, வெள்ளைநிற கல்லில் செய்த, 70 அடி உயர தீப ஸ்தம்பம் பிரமாண்டமாக காட்சியளிக்கிறது.தீப ஸ்தம்ப மண்டபத்தில், தினமும் படிபூஜைகள் நடந்து வருகின்றன. வேறு எங்கும் இல்லாத வகையில், தீபஸ்தம்ப மண்டபத்தின் மேற்கு பகுதியில், சுந்தரமூர்த்தி நாயனார் இறைவனை சேவித்தபடி நிற்கிறார்; அருகிலேயே, இரண்டு முதலை சிற்பங்களும் வாய்பிளந்து நிற்கின்றன; மையத்தில் நந்தியெம் பெருமான் காட்சியளிக்கிறார்.கிழக்கு பார்த்த பகுதியில், வழக்கம் போல் விநாயகப்பெருமான் காட்சியளிக்கிறார். வடக்கு மற்றும் தென்புறத்தில், முதலை வாயில் இருந்து பிள்ளை வெளிப்படும் புடைப்பு சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன.'நீராகி நீள அகலம் தானே ஆகி நிழலாகி நீள்விசும்பின் உச்சியாகி' என்று, திருத்தாண்டகம் பதிகத்தில், திருநாவுக்கரசர் சிவபெருமானை உயர்த்தி பாடியுள்ளார். அதன் வண்ணம். சிவனே நீள, அகலமான அருட்கோலத்துடன் தீபஸ்தம்பம் அருள்பரப்பிக்கொண்டிருக்கிறது. தீப ஸ்தம்பம் மற்றும் ராஜகோபுரத்துக்கு இடையே உள்ள, 30 கால் மண்டபம், மைசூர் மன்னர் உடையார் ஆட்சிக்காலத்தில், கி.பி., 1756ல் கட்டப்பட்டது.முப்பது கால் மண்டபம், மிகுந்த வேலைப்பாடுகளுடன் இறுதியாக அமைக்கப்பட்டிருந்தது. அதன்பின், தற்போதைய திருப்பணியில், திருமாளிகை பத்தி மண்டபம், எழிலுற கட்டி முடிக்கப்பட்டுள்ளது. வெள்ளைக்கல் தீப ஸ்தம்ப மண்டபம், வேறு எங்கும் இல்லாத அளவுக்கு, மிக பிரமாண்டமாக அமைந்துள்ளது. அதில், வெற்றி - தோல்வி, இன்பம் - துன்பம், பிறப்பு - இறப்பு என்பது கலந்த வாழ்வியலை உணர்த்தும் வகையில், இரண்டு துாண்கள், வெள்ளை கல்லிலும், இரண்டு துாண்கள் கருப்பு கருங்கற்களிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன.'நமசிவாய' எனும் பஞ்சாட்சர மந்திரத்தை குறிக்கும் வகையில், ஐந்து படிகள் உள்ளன; பஞ்சாட்சரத்தின் வழியே சென்றால், ஜோதியாய் ஒளிரும் இறைவனை அடையலாம் என்று உணர்த்துவது போல், தீப ஸ்தபம், வேறு எங்கும் இல்லாதபடி, அழகிய படிகளுடன் காட்சியளிக்கிறது.'மெய்ஞானமாகி மிளர்கின்ற மெய்ச்சுடரே''மாசற்றசோதி மலர்ந்த மலர்ச்சுடரே''சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே''காக்கும் என் காவலனே காண்பரிய பேரொளியே'என்று மாணிக்கவாசகர் நெஞ்சுருக பாடி, ஊனினை உருக்கி, உள்ளொளி பெருக்கிய சிவனை வழிபட்டு, அவன் அடியை பணிவோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ