| ADDED : நவ 20, 2025 02:16 AM
உடுமலை: உடுமலை நகராட்சி பழைய அலுவலக கட்டடம் நுாற்றாண்டு பழமையானதாகும். பழமையான இந்த கட்டடத்தை பாதுகாக்கும் வகையிலும், உடுமலை பகுதிகளில் சேகரிக்கப்பட்ட பழங்கால பொருட்கள், வரலாற்றை ஆவணப்படுத்தும் வகையில் அருங்காட்சியம் அமைக்கப்படும். வளாகத்தின் முன் பகுதியில், செம்மொழி பூங்கா மற்றும் மாரியம்மன் கோவில் பழைய தேர் காட்சிக்கு வைக்கப்படும் என, மூன்று ஆண்டுக்கு முன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தற்போது, பழைய அலுவலக கட்டடமான தாகூர் மாளிகையில், மாவட்ட அரசு இசைப்பள்ளி துவக்கப்பட்டுள்ளதோடு, விடுதலைப்போராட்ட வீரர் தளி எத்தலப்பர் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், செம்மொழி பூங்கா அமைக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. பழமையான கட்டடத்தின் முன், சேறும், சகதியுமாக காணப்படுகிறது. அதே போல், மாரியம்மன் கோவில் தேர், பயன்பாடு இல்லாமல், வீணாக தனியார் நிலத்தில் பராமரிப்பின்றி வைக்கப்பட்டுள்ளது. எனவே, நகராட்சி அலுவலக வளாகத்தில், செம்மொழி பூங்கா அமைக்கும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்தி அழகு படுத்த வேண்டும். பழமையான மற்றும் பாரம்பரியமான அற்புத வேலைப்பாடுகளுடன் கூடிய, மாரியம்மன் கோவில் பழைய தேரை, நகராட்சி அலுவலகத்தில் காட்சிப்படுத்தவும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.