வாய்க்கால் இருக்கு... கடைமடைக்கு தண்ணீர் வரவில்லை! துங்காவி விவசாயிகள் கண்ணீர்
உடுமலை; அமராவதி பிரதான கால்வாய், துங்காவி - 2 கிளைக்கால்வாயில், கடை மடை பகுதியிலுள்ள நிலங்களுக்கு, 40 ஆண்டுகளாக நீர் வரவில்லை, என பாசன சங்க நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.உடுமலை, அமராவதி பிரதான வாய்க்காலில், 22 -6-2015, கிளை வாய்க்கால், கடந்த 1984ல் வெட்டப்பட்டது. வாய்க்கால் வெட்டப்பட்டு, 40 ஆண்டுகளாகியும் கடைமடைக்கு தண்ணீர் வழங்கப்படாததால், நிலம் வழங்கிய, பாசன விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.அமராவதி புதிய வாய்க்கால் துங்காவி - 2 கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்க நிர்வாகிகள் கணேசன், குப்புசாமி உள்பட விவசாயிகள், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர்.குறைகேட்பு கூட்டத்தில் பங்கேற்று, கடை மடைக்கு தண்ணீர் வழங்க கோரி, கலெக்டர் கிறிஸ்துராஜிடம் மனு அளித்தனர்.பாசன சங்க நிர்வாகிகள் கூறியதாவது: அமராவதி பிரதான வாய்க்காலில், துங்காவி - 2 புதிய கிளை வாய்க்கால் வெட்டப்பட்டு 40 ஆண்டுகளாகிறது.நிலம் ஒப்படைப்பு செய்யப்படாதபோது, விவசாயிகள் அவரவர் நிலத்துக்கு நேராக, அனுமதியின்றி மடைகளை அமைத்து பாசனம் செய்துவந்தனர். அதனால், கடைமடை பாசனத்துக்கு இதுவரை தண்ணீர் வந்துசேரவில்லை.உடுமலை வருவாய் கோட்டாட்சியர் எடுத்த நடவடிக்கையால், அரசு அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த பைப் மடைகள் அகற்றப்பட்டன. தற்போது கிளை வாய்க்காலில், தனிநபர் இருவர் மடைகள் வைத்துள்ளனர். இதனால், கடைமடை பாசனம் கேள்விக்குறியாகிறது. மொத்தம், 365 ஏக்கர் பாசனம் பெறும் இந்த கிளை வாய்க்காலில், கடைமடையில் மட்டும், 170 ஏக்கர் நிலம், பாசனம் இன்றி உள்ளது.நிலம் ஒப்படைப்பு செய்து இரண்டு ஆண்டுகளாகியும், பொதுப்பணித்துறையினர் வாய்க்கால் சீரமைப்பு உள்ளிட்ட எந்த பணிகளையும் மேற்கொள்ளவில்லை. கடைமடையிலிருந்து, தலைமடை வரை செல்ல, கிளை வாய்க்காலில் பாதைகள் கூட இல்லை.வாய்க்காலில் முறைகேடாக வைக்கப்பட்டுள்ள மடைகளை அகற்றவேண்டும். பொதுப்பணித்துறையினர், வாய்க்காலை துார்வாரி சீர்படுத்தவேண்டும். கடைமடை பாசனத்துக்கு உரிய தண்ணீர் வழங்கவேண்டும்.எங்கள் கோரிக்கைகளை கலெக்டரிடம் தெரிவித்துள்ளோம். உடுமலை ஆர்.டி.ஓ., வாயிலாக ஆய்வு நடத்தி, கடைமடை பாசனத்துக்கு தண்ணீர் வந்து சேர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.