திருப்பூர் : பின்னலாடை ஜவுளித்தொழிலையும், லட்சக்கணக்கான தொழிலாளர்களையும் பாதுகாக்கும் வகையில், பருத்தி ஏற்றுமதிக்கு ஓ.ஜி.எல்., லைசென்ஸ் மூலமாக கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என, ஏற்றுமதியாளர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.சங்க தலைவர் சக்திவேல், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஆனந்த் சர்மாவுக்கு அனுப்பியுள்ள கடிதம்:மத்திய அரசு, ஜவுளித்தொழிலை மேம்படுத்தும் வகையில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கையை எடுத்து வருகிறது. வர்த்தகர்கள் பயனடையும் வகையில், ஐரோப்பிய நாட்டு வர்த்தகத்துக்கு, வர்த்தக சலுகை ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது; சம்பந்தப் பட்ட துறை அதிகாரிகள் மூலமாக, ஒட்டுமொத்த ஜவுளித்தொழில் பாதுகாப்பிற்கான நடவடிக்கைகள், எதிர்காலத்தில் தொழில் பாதிப்புகளை சமாளிக்கும் வகையில் உள்ளது.கடந்த 30ம் தேதி நடந்த, தேசிய பருத்தி ஆலோசனைக்குழு கூட்டத்தில், வரும் பருத்தி ஆண்டில், 355 லட்சம் பேல் பருத்தி உற்பத்தியாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில், 325 லட்சம் பேல் பருத்தி உற்பத்தியாகி யிருந்தும், ஏற்றுமதிக்கு அனுமதித்ததால், இடைப்பட்ட காலத்தில் பிரச்னை ஏற்பட்டது.பல லட்சம் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும், ஜவுளித்தொழிலின் முக்கிய ஆதாரம் பருத்தி. லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்துக்காக, 'ஓபன் ஜெனரல் லைசென்ஸ்(ஓ.ஜி.எல்.,)' மூலமாக ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும். குறிப்பாக, 2012 ஜன., மாதத்துக்கு பிறகு பஞ்சு ஏற்றுமதிக்கு அனுமதி வழங்க வேண்டும்.போதிய பருத்தி பஞ்சு இருப்பு இல்லாமல், பஞ்சு விலை கடுமையாக உயர்ந்ததால், கடந்த ஆண்டு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன. நியாயமான விலையில், தொழில்துறையினருக்கு பஞ்சு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்நாட்டு தேவைகள் பூர்த்தியான பிறகுதான், பருத்தி ஏற்றுமதியை அனுமதிக்க வேண்டும். வரும் பருத்தி ஆண்டில், 2012 ஜன., மாதத்துக்கு பின், மாதவாரியான அளவுடன் பஞ்சு ஏற்றுமதியை அனுமதிக்க ஆவன செய்ய வேண்டும், என தெரிவித்துள்ளார்.