| ADDED : செப் 22, 2011 01:19 AM
உடுமலை : இரண்டு வார்டு; ஒரு பூத் என்ற அடிப்படையில் தேர்தல் நடக்கும் ஊராட்சி ஒட்டு சாவடிகளில் இம்முறை புதிதாக நீல நிற ஒட்டு சீட்டுகளை பயன்படுத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.ஒட்டுப்பதிவில் குழப்பத்தை தவிர்க்க கூடுதலாக நீல நிற வண்ணத்தில் ஒட்டு சீட்டை பயன்படுத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி வார்டுகள் சீரமைக்கப்பட்டு ஒரு வார்டு; ஒரு உறுப்பினர் முறை இம்முறை அமல்படுத்தப்பட உள்ளது. இதனால், ஊராட்சிகளில் 6,9,12 ஆகிய எண்ணிக்கைகளில் வார்டுகள் அமைகின்றன.குறைந்த வாக்காளர்கள் உடைய ஊராட்சிகளிலும் சீரமைப்பு மேற்கொள்ளப்பட்டு வார்டு பிரிக்கப்பட்டுள்ளது. குறைந்த வாக்காளர்கள் உடைய வார்டுகளுக்கு ஒட்டுப்பதிவின்போது தனியாக ஓட்டுச்சாவடி அமைக்காமல், ஒரே ஓட்டுச்சாவடியில் இரண்டு வார்டுகளுக்கு சேர்த்து ஒட்டுப்பதிவு நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டது.ஒரே ஓட்டுச்சாவடியில் இரண்டு வார்டுகளுக்கு ஒட்டுப்பதிவு நடக்கும்போது ஒட்டு சீட்டு வழங்குதிலும், பதிவிலும் குளறுபடிகள் ஏற்படும் வாய்ப்பு இருந்தது. இதையடுத்து, கடந்த தேர்தல்களில் பயன்படுத்த வண்ணங்களுடன் கூடுதலாக ஒரு வண்ணத்தில் ஒட்டு சீட்டு அச்சடிக்கப்பட்டுள்ளது.கடந்த தேர்தலில், மாவட்ட ஊராட்சி வார்டுக்கு மஞ்சள்; ஊராட்சி ஒன்றிய வார்டு பச்சை; ஊராட்சி தலைவர் இளஞ்சிவப்பு; ஊராட்சி வார்டு உறுப்பினர் வெள்ளை ஆகிய வண்ணங்களில் ஒட்டுசீட்டு வழங்கப்பட்டது.தற்போது, இரண்டு வார்டுகளுக்கு தேர்தல் நடக்கும் ஒட்டுசாவடிகளில் ஒரு வார்டுக்கு வெள்ளை நிறம்; மற்றொரு வார்டுக்கு நீல நிற ஒட்டுசீட்டுகள் வழங்கப்படும். இம்முறை நீல நிற ஒட்டு சீட்டுகள் முதல்முறையாக உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ளன. ஒட்டு சீட்டு வண்ணங்கள் குறித்து தேர்தல் நடத்தும் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு தேர்தல் ஆணையம் வழிகாட்டுதல் வழங்கியுள்ளது.இத்தகவலை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்தனர்.