இளம்பெண் தற்கொலையில் கணவர் உட்பட மூவர் கைது
திருப்பூர்:திருப்பூரில் இளம்பெண்ணை தற்கொலைக்கு துாண்டியதாக கணவர், மாமனார், மாமியாரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர், தாராபுரம் ரோடு, கே.செட்டிபாளையத்தை சேர்ந்த குப்புசாமி - சுகந்தி தம்பதியின் மகள் பிரீத்தி, 27; ஐ.டி., ஊழியர். இவருக்கும், ஈரோடு, வீரப்பன்சத்திரத்தை சேர்ந்த சதீஷ்வர், 29, என்பவருக்கும் கடந்தாண்டு செப்டம்பரில் திருமணம் நடந்தது. வரதட்சணையாக, 80 சவரன் நகை, 20 லட்சம் ரூபாய் ரொக்கம், கார் ஆகியவை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆக., 5ம் தேதி தாய் வீட்டில் பிரீத்தி துாக்கிட்டு இறந்தார். பூர்வீக சொத்து விற்ற வகையில், 50 லட்சம் ரூபாய் வருவதை அறிந்து, சதீஷ்வர் பணம் கேட்டு வற்புறுத்தியதாகவும், இதனால் மனமுடைந்து பிரீத்தி தற்கொலை செய்து கொண்டதாகவும், உறவினர்கள் குற்றஞ்சாட்டினர். திருப்பூர் ஆர்.டி.ஓ., மோகனசுந்தரம் விசாரித்தார். பிரீத்தியை தற்கொலைக்கு துாண்டியதாக சதீஷ்வர், அவரது பெற்றோர் விஜயகுமார், 56, உமா, 52, ஆகிய மூன்று பேரையும் நல்லுார் போலீசார் கைது செய்தனர்.