உடுமலை : உடுமலையில், அரசு பஸ் ஓட்டுனர் தாக்கப்பட்டதால், ஊழியர்கள் பஸ்களை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.நேற்று காலை, திருப்பூரிலிருந்து உடுமலைக்கு அரசு பஸ் சென்றுக் கொண்டிருந்தது. உடுமலை பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, பஸ் ஓட்டுனர் உதயசூரியனுக்கும், பஸ்சை தொடர்ந்து சென்ற, இரு சக்கர வாகனத்தில் இருந்தவர்களுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள், அரசு பஸ் ஓட்டுனரை தாக்கியுள்ளனர். இவர்களின் ஒருவரான, உடுமலை பழனியாண்டவர் நகரை சேர்ந்த பத்மநாபனை, பொதுமக்கள் பிடித்தனர். டிரைவர் தாக்கப்பட்ட சம்பவம், உடுமலை போக்குவரத்து கிளை கழக ஊழியர்களிடம் பரவியது; இதனால், அரசு பஸ்களை இயக்க மறுத்தனர். தகவலறிந்த உடுமலை டி.எஸ்.பி., செந்தில் தலைமையில் போலீசார், ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். போலீசாரை முற்றுகையிட்ட ஊழியர்கள், 'உடுமலை பகுதியில், அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் தாக்கப்படுவது தொடர்கிறது. கடந்த 28ம் தேதி, கல்லாபுரம் பஸ்சை ஒட்டி சென்ற ஜெயமோகனை, தனியார் பஸ் நிறுவனத்தை சேர்ந்த மேலாளர் மற்றும் ஊழியர்கள் தாக்கியுள்ளனர். உடுமலை போலீசில் புகார் அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இரு நாட்களுக்கு முன், வழித்தட எண் 21ல், டிக்கெட் வாங்கக் கூறிய நடத்துனரை, ஒருவர் கடித்து காயப்படுத்தியுள்ளார். தற்போது, இதுபோன்ற சம்பவம் ஏற்பட்டுள்ளது. சம்பவங்களில் ஈடுபட்டவர்களை உடனடி யாக கைது செய்ய வேண்டும்' என்றனர். பத்மநாபனை கைது செய்த போலீசார், இரவு 7.00 மணிக்குள், சம்பவங்களில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படுவர் என உறுதியளித்ததால், மாலை 4.30 மணியளவில், பஸ்களை இயக்கத் துவங்கினர்.