உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நெல் விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுரை

நெல் விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுரை

மடத்துக்குளம் : குறுவை நெல் சாகுபடியில் திருத்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தை பின்பற்றினால் கூடுதல் மகசூல் கிடைக்கும் என மடத்துக்குளம் வட்டார வேளாண் துறை அறிவுறுத்துள்ளது. வேளாண்மைத்துறையினர் கூறியதாவது : வழக்கமான நெல் சாகுபடி முறையை விட திருத்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தால் அதிக மகசூல் கிடைத்து வருவது அனுபவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நாற்றங்கால் அமைக்கும் போது மேட்டு பாத்தி முறையில் நாற்றங்கால்கள் அமைக்க வேண்டும். ஒரு எக்டேருக்கு 3 சென்ட் அளவில் நாற்றங்கால் அமைத்தால் போதுமானது. நடவு செய்யும் போது செம்மை நெல் சாகுபடி தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, ஒன்றை நாற்று நடவு முறையில் நடவு செய்ய வேண்டும். நாற்றுக்கு, நாற்று 25 செ.மீ., என்ற அளவில் நடவு செய்ய வேண்டும். களை எடுக்கும் போது 'கோனோவீட்டர்' இயந்திரம் மூலம் களை அனைத்தும் உரமாக மாற்றப்படுகிறது. இதனால், களை எடுக்கும் செலவு இல்லாததோடு, உரத்திற்கான செலவு பாதியாக குறைகிறது. மேலும், வரிசைக்கு ஒரு நாற்று என்ற அடிப்படையில் நடப்படுவதால், இடைவெளி அதிகரித்து, நெல் நாற்றில் அதிகளவு தூர் மற்றும் வேர் பரவுகிறது. இதனால், வழக்கமான நடவு முறையில் கிடைக்கும் மகசூலை விட 25 முதல் 50 சதவீதம் வரை கூடுதல் மகசூல் கிடைக்கிறது. இந்த முறையில் தண்ணீர் குறைவாகவே தேவைப்படுகிறது. வழக்கமான நடவு முறையில் விதைப்பு முதல் அறுவடை வரை எக்டேருக்கு 1200 மி.மீ., தண்ணீர் தேவை உள்ளது. செம்மை நெல் சாகுபடி முறையில் 600 மி.மீ., தண்ணீர் இருந்தால் போதுமானது, என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை