உடுமலை : உடுமலையில், களப்பயணம் மேற்கொண்டுள்ள வேளாண்பல்கலைக்கழக மாணவிகள் மலைவாழ் மக்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு பயிற்சி அளித்தனர்.கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலை நான்காமாண்டு மாணவிகள் ஊரக வேளாண் பயிற்சி அனுபவம்-2011' என்ற தலைப்பில், திருப்பூர் மாவட்டத்திற்கு களப்பயணமாக வந்து, பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.உடுமலை பகுதியில், கல்லாபுரம், அமராவதி நகர், எலையமுத்தூர் பகுதிகளில், பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். கல்லாபுரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, விளைநிலங்களுக்கு சென்ற மாணவிகள் விவசாயிகளுடன் இணைந்து நாற்று நடும் பணியில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக அமராவதி நகர், கரட்டுப்பதி மலைவாழ் மக்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சிப்பி காளான் வளர்ப்பு, பினாயில், சோப்பாயில், சொட்டுநீலம் ஆகியவை தயாரிப்பது குறித்து செயல்முறை மூலமாக பயிற்சி அளித்தனர். பயிற்சியினை மாணவிகள் அபிராமி, ஆர்த்தி, சிந்து, சந்திரலேகா, மீனாட்சி, நிஷாத், சுகுணா ஆகியோர் அளித்தனர். மாணவிகள் கூறுகையில், 'ஊரக வேளாண் பயிற்சி அனுபவம் -2011ன் கீழ் ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டங்களில், பயிற்சி மேற்கொண்டுள்ளோம். ஏழு பேர் வீதம் ஒரு பகுதிக்கு சென்று அப்பகுதியிலுள்ள விளைநிலங்களை நேரடியாக பார்வையிடுவதுடன், பல்வேறு பயிற்சிகள் அளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், உடுமலை பகுதியில் விவசாயிகளுக்கு விவசாயம் சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. காளான் வளர்ப்பு பற்றிய தகவல்கள் குறித்து விவசாயிகளுக்கு துண்டு பிரசுரங்கள் மூலமாக விளக்கப்படுகிறது. வேளாண்துறை, வனத்துறையினர் உதவியுடன் இப்பயிற்சி அளிக்கப்பட்டது என்றனர்.