திருப்பூர் : 'பிரெய்ன் சொல்யூஷன்' தொழில்நுட்பத்தில் சோதனை ஓட்டத்தை துவக்குவதற்காக, அருள்புரம் பொது சுத்திகரிப்பு நிலையம் நேற்று திறக்கப்பட்டது. இதில் இணைக்கப்பட்டுள்ள சாய ஆலைகள் இன்று முதல் செயல்படும். 'பிரெய்ன் சொல்யூஷன்' தொழில்நுட்பம் பயன்படுத்தி சோதனை அடிப்படையில் இயங்க, அருள்புரம் பொது சுத்திகரிப்பு நிலையத்துக்கு மூன்று மாத அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இத்தொழில்நுட்பம் வாயிலாக, ஆர்.ஓ., சுத்திகரிப்புக்கு பின் வெளியேறும் 20 சதவீத கழிவு நீரையும் முழுமையாக சுத்திகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன் பின், 80 சதவீத கழிவுநீர் சுத்தமான தண்ணீராக மாற்றி, மீண்டும் சாய ஆலைகளுக்கே திருப்பி அனுப்பப்படும். அதில் 'ரிஜக்ட்' ஆகும் 20 சதவீத கழிவை, இப்புதிய தொழில்நுட்பம் மூலம் சுத்திகரித்து, மெக்னீசியம், கால்சியம், கார்பனேட் போன்றவை நீக்கப்படும். உப்புத்தன்மை மட்டுமே மீதமுள்ள கழிவு, சாயமிடும் பணிக்காக மீண்டும் சாய ஆலைகளுக்கே அனுப்பப்படும். இதற்கென அனைத்து சாய ஆலைகளுக்கும் தனியாக குழாய்கள் பதிக்கும் பணி நிறைவடைந்துள்ளது. இத்திட்டம் மூலம் சுத்திகரிப்பு நிலையத்தில் இணைக்கப்பட்டுள்ள சாய ஆலைகள் பயன்படுத்தி சுத்திகரிப்புக்கு அனுப்பும் தண்ணீர் அளவு, தரம் வாரியாக அதில் உள்ள ரசாயனங்கள் தொட்டிக்குச் செல்லும் அளவு, சுத்திகரிக்கப்பட்ட பின், மீண்டும் சாய ஆலைக்கு அனுப்பப்படும் தண்ணீரின் அளவு ஆகியன ஆங்காங்கே 'புளோ மீட்டர்' மூலம் கண்காணிக்கப் படுகிறது. இந்த அளவு அனைத்தும் ஆன்-லைன் முறையில் வெளிப்படையாக செய்யப்படுகிறது. சுத்தி கரிப்பு நிலையம், சாய ஆலை, மாசுக்கட்டுப்பாடு வாரியம் உள்ளிட்ட எந்த அலுவலகத்திலும் இதை நேரடியாக கண்காணிக்க முடியும். இதன் மூலம் எந்த இடத்தி லும் தவறு நேராத வகையில் வெளிப் படையாக மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.இப்பணிகள் நிறைவடைந்ததால், அருள்புரம் பொது சுத்திகரிப்பு நிலையம் நேற்று திறக்கப்பட்டது. இதற்கு உட்பட்ட 15 சாய ஆலைகளில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பறக்கும் படை அலுவலர் குழு நேற்று ஆய்வு மேற்கொண்டது. விதிமுறைப்படி, 30 சதவீத பயன்பாடு மட்டுமே சோதனை அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்பதால், சாய ஆலைகளில் அதற்குரிய இயந்திரங்கள் தவிர, மீதமுள்ள இயந்திரங்களை பயன்படுத்த முடியாத வகையில் 'சீல்' வைக்கப்பட்டன.அதன் பின், சாய ஆலைகளில் தொழிலாளர்கள் இயந்திரங்களுக்கு பூஜை செய்து தயார்படுத்தினர். இருப்பினும், சாயமிடும் பணி இன்று (4ம் தேதி) துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுத்திகரிப்பு நிலையத்துக்கு கழிவு நீர் நாளை வந்து சேரும்.சாய ஆலைகளில் 30 சதவீத பயன்பாடு தவிர மீதமுள்ள இயந்திரங்களுக்கு 'சீல்' வைப்பதற்கு முன், சாய ஆலை உரிமையாளர்களுடன் பறக்கும் படை அலுவலர்கள் செயற்பொறியாளர் மலையாண்டி, உதவி செயற்பொறியாளர் கள் ராதாகிருஷ்ணன் மற்றும் சத்யராஜ் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். சோதனை முயற்சி முழு வெற்றி பெற, முழுமையாக ஒத்துழைப்பு அளிக்க கேட்டுக்கொண்டனர். மேலும், 15 நாள் அவகாசத்தில் 30 சதவீத பயன்பாடு வெற்றி பெறும் நிலையில், அடுத்த கட்டமாக 50 சதவீத பயன்பாடும், வழங்கப்பட்டுள்ள மூன்று மாத அவகாசத்தில் 100 சதவீதமும் ஆலைகள் இயங்க ஏதுவாக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். முன்னதாக, சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து கழிவு நீர் திரும்ப ஆலைகளுக்கு அனுப்பும் குழாய் இணைப்பு பணியையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.