திருப்பூர் : ரத்தத்தில் 'ஹீமோகுளோபின்' அளவு சரியாக இருக்கிறதா என்பதை ஒவ்வொருவரும் அடிக்க டாக்டர்களிடம் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். 'ஹீமோகுளோபின்' அளவு குறைந்திருந்தால், ஊட்டச்சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்கின்றனர் டாக்டர்கள். மனித உடலுக்கு ரத்தம் இன்றியமையாதது. அதில், 'ஹீமோகுளோபின்' அளவு பலருக்கு குறைவாக இருப்பதால் விபத்து, ஆப்ரேஷன் உள்ளிட்ட சமயங்களில், உரிய சிகிச்சை அளிக்க முடியாமல் போகிறது. கர்ப்பிணிகளுக்கு மட்டுமின்றி ஆண்களுக்கும் 'ஹீமோகுளோபின்' குறைபாடு இருக்கிறது. சாதாரணமாக குழந்தைகள் உடலில் ரத்தத்தில் 16 முதல் 18 மில்லி கிராம், ஆண்களுக்கு 12 முதல் 14 மில்லி கிராம், பெண்களுக்கு 10 முதல் 14 மில்லி கிராம் 'ஹீமோகுளோபின்' இருக்க வேண்டும். நம் நாட்டில் பெண் குழந்தைகள் பிறக்கும்போது, இந்த அளவு சீராக இருக்கிறது. பருவ நிலை, கர்ப்பிணியாகும்போது மாறுபாடு ஏற்படுகிறது. இதற்கு, ஊட்டச்சத்தான உணவு பொருட்களை உட்கொள்ளாமல் இருப்பது, அடிக்கடி இடம் மாறி, புதிய சீதோஷ்ண நிலையில் வெப்பமான இடத்தில் வாழ்ந்து பழகுவது காரணமாகும். இவற்றால் பிரசவத்தின் போது பிறக்கும் குழந்தை, தாய் இருவரும் ஆரோக்கியமாக இருப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணிகளுக்கு இலவச பரிசோதனை செய்யப்படுகிறது. பெருவாரியானகர்ப்பிணிகள், இப்பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு வராமல், பிரசவத்துக்கு மட்டுமே வருகின்றனர். தனியார் மருத்துவமனைக்கு 'செக்-ஆப்' செய்ய செல்வோரும், முன்கூட்டியே 'ஹீமோகுளோபின்' குறித்து பரிசோதனை செய்து கொள்வதில்லை. இதனால், பிரசவ நேரத்தில் போதிய ஊட்டச்சத்து இல்லாமல் மாத்திரை, ஊசிகளை கட்டாயம் பயன்படுத்த வேண்டிய நிலை டாக்டர்களுக்கு ஏற்படுகிறது. உயிர் பாதிப்பு இல்லை என்ற போதும், பிறக்கும் குழந்தை ஊட்டச்சத்துடன் இருக்கவும், சேய் உடல் நலத்துடன் இருக்கவும் முன்கூட்டியே 'ஹீமோகுளோபின்' பரிசோதனை செய்து கொள்வது அவசியம். இதேபோல் ஆண்களில் பலரும் அதிக வேலைப்பளு, குடும்ப சூழ்நிலையால் போதிய உணவு உட்கொள்ளாமல் போவதால் 'ஹீமோகுளோபின்' பற்றாக்குறை ஏற்படுகிறது. பெண்களில் சிலர், பிரசவ காலத்திலாவது பரிசோதனை செய்கின்ற னர். ஆனால், ஆண்கள் இத்தகைய பரிசோதனைகளை மேற்கொள்வதே இல்லை. அதிக அளவு கீரை, வைட்டமின் 'பி' நிறைந்த உணவுகள், பீட்ரூட், பேரீச்சம் பழம் உள்ளிட்ட இரும்பு சத்து நிறைந்த உணவு பொருட்களை தவறாமல் சாப்பிட வேண்டும்; 10 மில்லி கிராமுக்கு கீழ் ரத்தத்தில் 'ஹீமோகுளோபின்' அளவு குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்கின்றனர் டாக்டர்கள். திருப்பூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் கேசவனிடம் கேட்ட போது,''கீரை வகைகளை அதிக அளவில் சாப்பிட வேண்டும். சிலர் காலை வேளையில் பச்சை கீரைகளை வெறும் வயிற்றில் சாப்பிடுகின்றனர். இது, ஆரோக்கியமானதே. ''ஏதாவது ஒரு மருத்துவ பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு வரும்போது கட்டாயம் 'ஹீமோகுளோபின்' குறைபாடு தெரிந்து விடும். இருப்பினும், வைட்டமின் 'பி' நிறைந்த பேரீச்சம்பழம், இரும்பு சத்து அதிகமான உணவு பொருட்களை கட்டாயம் சாப்பிட வேண்டும். 10 மில்லி கிராம், அதற்கு குறைவாக 9.5 அல்லது 9.8 இருந்தால் மாத்திரை மூலம் சரி செய்து விடலாம். ஒன்பதுக்கு கீழ் குறைந்தால் ரத்தத்தில் 'ஹீமோகுளோபின்' அளவு அதிகரிக்க டாக்டர்கள் கூறும் ஊட்டச்சத்தான உணவுகளை கட்டாயம் சாப்பிட வேண்டும். இவ்விஷயத்தில் கர்ப்பிணிகள் மிக கவனமுடன் இருக்க வேண்டும்,'' என்றார்.