| ADDED : ஆக 14, 2011 03:04 AM
திருப்பூர் : நல்லூர் பள்ளக்காட்டுப்புதூர் ரோட்டில் செயல்படுகிறது,
அத்திமரத்துபுதூர் பகுதிக்கான அங்கன்வாடி. பள்ளக்காட்டு புதூர்,
அத்திமரத்துபுதூர் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த 20 குழந்தைகள் அங்கன்வாடிக்கு
வருகின்றனர். காலை 8.00 மணி முதல் குழந்தைகளுக்கு பாடம், விளையாட்டு
சொல்லிக் கொடுக்கப்படுகிறது; மதியம் சாப்பாடு வழங்கப்பட்டு, மாலை 3.00
மணிக்கு வீட்டுக்கு அனுப்பப்படுகின்றனர்.ஒரு அறை மட்டுமே உள்ள இந்த
மையத்தில், குழந்தைகளுக்கான சத்துமாவு மூட்டை, பாட உபகரணங்கள் வைப்பதற்கே
இடம் சரியாக உள்ளது. சமையலறை இல்லாததால், குறுகலாக உள்ள கட்டடத்துக்குள்
குழந்தைகளுக்கு உணவு சமைக்கப்படுகிறது.மதிய உணவு சாப்பிட்டதும், சாக்கு
மூட்டைகளுக்கு மத்தியில் நெருக்கியடித்தபடியே குழந்தைகள் தூங்க
வேண்டியுள்ளது. குழந்தைகள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொள்வதால், அவர்களை
சமாளிக்க சத்துணவு ஆசிரியர்கள் சிரமப்படுகின்றனர்.அங்கன்வாடிக்கு தண்ணீர்
வசதி இல்லாத நிலையில், அருகில் உள்ளவர்களிடம் இருந்து சமையல், குடிநீர் பெற
வேண்டியுள்ளது. அங்கன்வாடி முன்பகுதி திறந்தே கிடப்பதால், குழந்தைகள்
திடீரென ரோட்டுக்கு சென்றுவிடுவதால், வாகனங்களில் சிக்கிக் கொள்ளும் நிலை
ஏற்படுகிறது. சமையலறையுடன் கூடிய அங்கன்வாடி மையம் ஏற்படுத்துவதோடு,
சுற்றுச்சுவர் கட்ட வேண்டும்.