அவிநாசி : 'உள்ளாட்சி தேர்தலில் யாருக்கும் நாங்கள் 'பினாமியாக' செயல்பட மாட்டோம்,' என்று வீதி நாடகத்தின் முடிவில் பெண்கள் கருத்து தெரிவித்தனர்.அவிநாசியில் இயங்கி வரும் சமூகக்கல்வி மற்றும் முன்னேற்ற மையம் சார்பில், 'உள்ளாட்சி தேர்தலில் பெண்கள் பங்கேற்பு' என்ற தலைப்பில் வீதி நாடகம் நடந்தது. அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட், வாரச்சந்தை வளாகம், கருவலூர், நடுவச்சேரி, தேவம்பாளையம், பெரியாயிபாளையம் ஆகிய இடங்களில் நாடகம் நடத்தப்பட்டது. மைய இயக்குனர் நம்பி, 'உள்ளாட்சி தேர்தலில் பெண்கள் பங்கேற்பின் அவசியம்' குறித்தும், ஒருங்கிணைப்பாளர்
நயினான், 'உள்ளாட்சியில் பெண்கள் இட ஒதுக்கீடு' குறித்தும் விளக்கினர். தேர்தலில் பெண்கள் பங்கேற்கும் முறை, பெண் பிரதிநிதிகளின் கணவர்களின் அதிகார மிரட்டல், அதை எதிர்கொள்ளும் முறை குறித்து, கோவை 'விடியல்' நாடகக்குழுவினர் நடித்தனர்.சமூகக்கல்வி மற்றும் முன்னேற்ற இயக்குனர் நம்பி கூறுகையில், ''வரும் உள்ளாட்சி தேர்தலில் பெண்கள் போட்டியிட வலியுறுத்தி நாடகங்களை நடத்தினோம். ''அதற்கு கிராமப்புற பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. பெண்களுக்கான இடங்கள் மட்டுமின்றி, பொது தொகுதியிலும் போட்டியிட வைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறோம். ''வீட்டை மட்டுமல்ல; நாட்டையும் பெண்களால் ஆள முடியும் என்ற கருத்தையும், பெண்களாலும் திறமையாக நிர்வாகம் நடத்த முடியும் என்பதையும் நாடகம் வாயிலாக காட்டியபோது, அதை பெண்கள் வரவேற்றனர். ''குறிப்பாக யாருடைய 'பினாமி'யாகவும் நாங்கள் இருக்க மாட்டோம்,' என்று பெண்கள் கூறியது குறிப்பிடத்தக்கது,'' என்றார்.