| ADDED : செப் 21, 2011 12:03 AM
உடுமலை : அமராவதி ஆற்றங்கரையில், மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் பிராமணர்கள்
அதிகளவு வசித்த பிரம்மதேயம் எனப்படும் கிராமங்கள் இருந்ததும்,
அக்கிராமங்களுக்கு வரிவசூலில் இருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டதும்
கல்வெட்டு ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. உடுமலை அருகே கல்லாபுரம் பகுதியில்
முதன்முறையாக வேல்நகர் அருகே மண்ணில் புதைந்திருந்த வைஷ்ணவ கோவில் கடந்த
மாதம் கண்டறியப்பட்டது. கோவில் சுவர்களின் அடித்தளத்தில்
பொறிக்கப்பட்டிருந்த கல்வெட்டுகளை தொல்பொருள் ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர்.
இதில், அமராவதி ஆற்றங்கரையில் பிராமணர்கள் தாங்களே நிர்வகித்து வந்த
பிரம்மதேயம் எனப்படும் கிராமங்கள் அதிகளவு இருந்து; தற்போது மறைந்துள்ளது
தெரியவந்துள்ளது. இது குறித்து கல்வெட்டு ஆராய்ச்சியாளர் சுந்தரம்
கூறியதாவது: கல்லாபுரம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கோவில், மூன்றாம்
விக்கிரமசோழன் காலத்தில் கட்டப்பட்டதாகும். கோவில் அமைந்திருந்த ஊர் ஒரு
'பிரம்மதேயம்' என கல்வெட்டு குறிப்பிடுகிறது. பிரம்மதேயம் என்பது அரசன்
வேதம்வல்ல பிராமணர்க்கு முழுக்கிராமமாக தானமளிக்கப்பட்ட கிராமமாகும்.
இக்கிராமங்கள் அகரம், அக்ரஹாரம், பிரம்மதேயம், சதுர்வேதிமங்கலம் என பல
பெயரில் வழங்கப்பட்டது. சோழர்காலத்தில் பிராமணர்க்கு ஊர்கள் கொடையாக
வழங்கப்பட்ட செய்திகள் அதிகளவு கல்வெட்டுகளில் காணப்படுகிறது.
இக்கிராமங்களில் குடியேறிய பிராமணர்கள் மகாசபை என்னும் சபையை ஏற்படுத்தி
கொண்டு தாங்களே நிர்வாக பொறுப்பை மேற்கொண்டார்கள். அரசால் விதிக்கப்படும்
வரிகளிலிருந்து பிரம்மதேய கிராமங்களுக்கு முழு விலக்கு அளிக்கப்பட்டது.
கோவை மாவட்டத்தில் நொய்யல், ஆழியாறு மற்றும் திருப்பூர் மாவட்டத்தில்
அமராவதி ஆற்றங்கரையில் பல பிரம்மதேயங்கள் அளிக்கப்பட்டது.கல்லாபுரம் விண்ணகப்பெருமாள் கோவில் அமைந்திருந்த பிரம்மதேய கிராமம் 'ஸ்ரீ
உலகடைய பிராட்டி சதுர்வேதி மங்கலம்' என்ற பெயரால் வழங்கப்பட்டதாக கல்வெட்டு
குறிப்பிடுகிறது. கரைவழி நாட்டை பிரிந்த ராஜராஜ வளநாட்டு பிரம்மதேயம்
எனவும் குறிப்பிடப்பட்டுள்ளதால் ஏற்கனவே அமைந்திருந்த கரைவழிநாடு எனும்
நாட்டு பிரிவிலிருந்து புதிதாக அமைக்கப்பட்டது என தெரியவருகிறது. கரைவழி
நாடு அமராவதி அமராவதி ஆற்றங்கரைக்கு இருபுறமும் பரவியிருந்த நாடு.
கரைவழிநாட்டில் கடத்தூர், கொழுமம், சோழமாதேவிநல்லூர், கண்ணாடிப்புத்தூர்,
ஏழுர் ஆகிய கிராமங்கள் இருந்துள்ளன. கல்லாபுரம் அருகில் குமரலிங்கம்
கிராமமும் ஒரு சதுர்வேதிமங்கலமாக இருந்ததாகும். ஸ்ரீகுமரங்கபீமச்சதுர்வேதி
மங்கலம் என அக்கிராமம் குறிப்பிடப்பட்டிருந்தது. கல்லாபுரம் கோவில் இருந்த
பகுதி புதிய பிரம்மதேயமாக அமைக்கப்பட்டு அதன் காவல் பொறுப்பு குறிப்பிட்ட
சமுதாயத்தாரிடம் கொடுத்த செய்தி ருத்ரபாளையம் கிராமத்தில் கண்டறியப்பட்டு
அக்கல்வெட்டு கோவை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. கி.பி., 1277 ல்
இந்த கிராமம் உருவாக்கப்பட்டிருக்கலாம். கோவிலுக்கு வரும்
தலயாத்திரையாளர்களுக்கும், பக்தர்களுக்கும் உணவு அளிக்கவும். இரண்டு
சந்தியாதீபம் எரிக்கவும் இருபத்தேழு அச்சு காசும், இருபத்தேழு கலம்
நெல்லும் உபயமாக அளிக்கப்பட்டது. உணவளிக்கப்பட்ட தலயாத்திரையாளர்கள்
கல்வெட்டில் 'அபூர்விகள்' என்ற பெயரில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
குறிப்பிட்ட தானங்களை செய்தவர்கள் வேதநாயகபட்டர்; அவருடைய மகள் குழலாழி
மற்றும் தம்பி மகன்கள் இருவர் ஆவர். தானமளித்தவர்கள் இத்தானத்தை தலைமுறை,
தலைமுறையாக தொடர்வோம் என உறுதிமொழி எடுத்துள்ளனர். பதினெட்டு மண்டலத்து
ஸ்ரீவைஷ்ணவர்கள் தானத்தை கண்காணித்து பாதுகாப்பாளர்களாக இருப்பார்கள் என
கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டு வளநாடு, பிரம்மதேயம்
என்ற நிர்வாக அமைப்புகள் இயங்கிய முறைகளை தெளிவாக எடுத்து கூறுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.