உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தேர்தல் பணியில் ரசித்து ஈடுபடுங்கள்; கமிஷனர் "அட்வைஸ்

தேர்தல் பணியில் ரசித்து ஈடுபடுங்கள்; கமிஷனர் "அட்வைஸ்

திருப்பூர் : ''ஆர்வத்துடன், ரசித்து செய்யும் எளிமையான விஷயமாக தேர்தல் பணியை எடுத்துக் கொள்ள வேண்டும்,'' என தேர்தல் அலுவலர்களுக்கு கமிஷனர் ஜெயலட்சுமி அறிவுறுத்தினார்.உள்ளாட்சி தேர்தல் குறித்த பயிற்சி கூட்டம், திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது; மண்டல தேர்தல் அலுவலர்கள் பங்கேற்றனர்.தேர்தல் பணி குறித்து, கமிஷனர் ஜெயலட்சுமி பேசியதாவது:ஓட்டுப்பதிவு இயந்திரங்களை அடிக்கடி கையாள்வதன் மூலம், அதனுடன் நல்ல பரிச்சயத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும். இதனால், அதன் செயல்பாடுகளில் சிக்கல் நேரும்போது, எளிதாக அக்குறையை சரி செய்யலாம். மண்டல அலுவலர்களுக்கு பொறுப்பு மிக அதிகம்.ஓட்டுப்பதிவு மையங்கள், ஓட்டு எண்ணிக்கை மையங்கள் என இரு நாட்களிலும், கவனமாக செயல்பட வேண்டும். ஓட்டு எண்ணிக்கை குறித்த பயிற்சி, ஓட்டுப்பதிவுக்கு பின், அலுவலர்களுக்கு வழங்கப்படும். ஓட்டு எண்ணிக்கையில் பணியாற்றும் அலுவலர்களுக்கு, மீண்டும் ஒரு 'அப்பாயின்ட்மென்ட் ஆர்டர்' தரப்படும். தேர்தல் பணி குறித்து நாளை (இன்று) மதியம் 2.30 மணிக்கு ஜெய்வாபாய் பள்ளி கலையரங்கில் பயிற்சியும், அதைத்தொடர்ந்து 28ம் தேதி ஒரு பயிற்சியும் நடத்தப்படும். ஓட்டுச்சாவடி அலுவலர்கள், மண்டல அலுவலர்களுக்கு அனைத்து விதமான செயல்முறை விளக்கம் தரப்படும்.ஓட்டுச்சாவடி மண்டலம், மாநகராட்சி மண்டலம் என இரு வகைகளில், மண்டல அலுவலர்கள், ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்வது குறித்தும், அதில் என்னென்ன விவரங்கள் இருக்க வேண்டும் என்பது குறித்தும் அலுவலர்கள் முழுமையாக தெரிந்திருக்க வேண்டும். தேர்தல் பணி என்பது ஆர்வத்துடன், ரசித்து செய்ய வேண்டிய எளிமையான பணி; ரசித்து பணியாற்றினால், மீண்டும் தேர்தல் பணியாற்றும் வாய்ப்பை எதிர்பார்க்கும் மனநிலை உண்டாகும், என்றார்.அதைத்தொடர்ந்து, ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடு குறித்து அதிகாரிகளுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் 'பீப்' சத்தம் சரியாக வருகிறதா என கண்காணிக்க வேண்டும்; கடந்த தேர்தலில் 'பீப்' சத்தம் வரவில்லை என சில மையங்களில் பிரச்னை ஏற்பட்டது; ஓட்டுச்சாவடி மையங்கள், அதன் வழித்தடங்களை முன்பே தேர்தல் அலுவலர்கள் தெரிந்திருக்க வேண்டும். சட்டம் - ஒழுங்கு பிரச்னைகளை தவிர்ப்பதில், அதிகாரிகளின் அறிவுரைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். இயந்திரத்தில் பதிவான ஓட்டுகளின் எண்ணிக்கை; பதிவேட்டில் பதிவான வாக்காளர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை, அடிக்கடி சரிபார்க்க வேண்டும். தவறுள்ள பட்சத்தில் உடனடியாக மையத்தின் உயரதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ