வெள்ளகோவில் : பஸ்கள் நிறுத்தாததை கண்டித்து, வெள்ளகோவிலில் திருச்சி
ரோட்டில் நேற்று சாலை மறியல் நடந்தது. வெள்ளகோவில் பஸ் ஸ்டாண்டில் இருந்து
திருச்சி ரோட்டில், ஒரு கி.மீ., தூரத்தில் நடேசன் நகர் உள்ளது. வெள்ளகோவில்
கடை வீதியின் விரிவாக்கப் பகுதியான இங்கு 500க்கும் மேற்பட்ட வீடுகள்
உள்ளன. வெள்ளகோவிலில் இருந்து கரூர், திருச்சி செல்லும் பஸ்களும், கரூரில்
இருந்து திருப்பூர், கோவை செல்லும் பஸ்களும் நடேசன் நகரில் நின்று, பயணிகளை
ஏற்றி, இறக்க கோரி நேற்று காலை இப்பகுதி மக்கள் 500க்கும் மேற்பட் டோர்,
திருச்சி ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியல் காரண மாக, இரண்டு
கி.மீ., தூரத்துக்கு பஸ்கள், மணல் லாரிகள் வரிசையாக நின்றன. மறியலில்
மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் ஜோதி, ஜனநாயக மாதர் சங்க தலைவர் அங்குலட்சுமி
பங்கேற்றனர். காங்கயம் டி.எஸ்.பி., துரைபாஸ்கர், இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி,
அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் மணி ஆகியோர் பேச்சு நடத்தினர். மறியலை
விலக்கி கொண்டு, பேச்சுவார்த்தையில் பங்கேற்குமாறு கூறியதை அடுத்து,
மறியல் விலக்கப்பட்டது; அதன்பின், போக்குவரத்து சீரானது. கிளை மேலாளர் மணி
கூறுகையில், ''நடேசன் நகரில் போக்குவரத்து கழக பணியாளரை நிறுத்தி, பஸ்கள்
நிறுத்த ஏற்பாடு செய்துள்ளோம்,'' என்றார். அதிகாரிகளின் உறுதிமொழியை ஏற்று,
நடேசன் நகர் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.