திருப்பூர்:'அம்ரூத்' திட்டத்தில் 1,120 கோடி ரூபாய் மதிப்பில் 4வது குடிநீர் திட்டம் உள்ளிட்ட நிறைவேற்றப்பட்ட பல்வேறு திட்டங்கள் துவக்க விழா, புதிய திட்டங்கள் அடிக்கல் நாட்டு விழா, 60 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, திருப்பூரில் நேற்று நடந்தது. அமைச்சர் நேரு தலைமை வகித்தார்.அமைச்சர் உதயநிதி, திட்டங்களை துவக்கி வைத்து பேசியதாவது:திருப்பூரில், வரும் 2040ம் ஆண்டின் மக்கள் தொகை மற்றும் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு 4 வது குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது; 13 லட்சம் பேர் பயன் பெறுவர். தவிர ஏறத்தாழ 1362 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டமும் தற்போது திருப்பூர் மாவட்டத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.மாநில அரசு தன் சக்திக்கு மீறி, நிதி நிலை குறைவாக இருந்தும் மக்கள் நலத் திட்டங்களை வழங்கி வருகிறது. ஒரு ரூபாய் வருவாயாக அளித்தால், தமிழகத்துக்கு 29 பைசா மட்டுமே மத்திய அரசு தருகிறது. அன்றைய தேவையை மட்டுமல்ல; எதிர்காலத் தேவையையும் சிந்தித்து திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். நம் திட்டங்களுக்கு பாராட்டுகள் குவிகிறது. பல மாநிலங்கள் இங்குள்ள திட்டங்களை தங்கள் மாநிலங்களில் செயல்படுத்த முன் வந்துள்ளன. திட்டங்களின் துாதுவர்களாக மக்கள் உள்ளனர். முதல்வரின் முகமாக மக்கள் உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார். 7 கோடி பேருக்கு சுத்தமான குடிநீர்
அமைச்சர் நேரு பேசுகையில், ''முதல்வர் ஸ்டாலின் பதவியேற்ற இரண்டரை ஆண்டுகளில் 29 ஆயிரம் கோடி ரூபாய்க்கு குடிநீர் திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் 19 ஆயிரம் கோடி ரூபாய்க்கு புதிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இந்த அரசின் பதவிக்காலத்துக்குள் 7 கோடி பேருக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும். ''அடுத்த வாரம் சென்னையில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் துவங்கும். திருப்பூரில் இப்புதிய திட்டத்தில் தற்போது 2 நாளுக்கு ஒருமுறை வழங்கப்படும் குடிநீர் விரைவில் தினசரி வினியோகிக்கப்படும்,'' என்றார்.விழாவில் அமைச்சர் சாமிநாதன், கலெக்டர், எம்.பி.,க்கள் ஆ.ராஜா, சுப்பராயன், எம்.எல்.ஏ., செல்வராஜ், மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்ரமணியம்உள்ளிட்டோர் பங்கேற்றனர்.