பிரச்னைகள் வரும் போது அதற்குரிய தீர்வுகள் தேவை. அவற்றை ஒரு இயக்கமாக (மிஷன்) கூட மேற்கொள்ளலாம். ஆனால், 'மிஷன்' சாதிப்பதாக அமைய வேண்டும்; சோதிப்பதாக இருக்கக்கூடாது.பல்லடத்தில், கடை வீதி, தினசரி மார்க்கெட், வாரச்சந்தை, உழவர் சந்தை, வணிக வளாகங்கள் உள்ளிட்ட அனைத்தும் ஒருங்கிணைந்த பகுதியாக என்.ஜி.ஆர்., ரோடு உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, என்.ஜி.ஆர்., ரோடு வழக்கம்போல் பரபரப்பாக காணப்படுகிறது. வாகனங்கள் தாறுமாறாக செல்வதை தவிர்க்கும் வகையில், காமராஜர் சிலை முதல் அண்ணாதுரை சிலை வரை, போலீசார் பேரிகார்டுகள் வைத்துள்ளனர்.இவ்வாறு, தினசரி மார்க்கெட் அருகே வைக்கப்பட்டுள்ள பேரிகார்டுகளின் ஒரு பகுதி வாகனங்கள் நிறுத்தும் இடமாக பயன்பட்டு வருகிறது, போலீசாரின் இந்த நடவடிக்கையால் ஒரு வழி பாதையாக இந்த இடம் மாறி உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். செய்ய வேண்டியது என்ன?
என்.ஜி.ஆர்., ரோட்டில், பார்க்கிங் வசதியை ஏற்படுத்தித் தர நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீசாரின் நடவடிக்கைகளுக்கும் நகராட்சி ஒத்துழைப்பு தர வேண்டும். போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் விதமாக போலீசார் தற்போது மேற்கொண்ட நடவடிக்கை பாராட்டுக்குரியது. ஆனால், நிர்ணயிக்கப்பட்ட கால நேரத்துக்குப் பின் கனரக வாகனங்கள் என்.ஜி.ஆர்., ரோட்டுக்குள் நுழைவதை தடுக்க வேண்டும்.