உடுமலை: பருவ மழை காரணமாக தக்காளி வரத்து சரிந்துள்ளதால், விலை உயர்ந்து வருகிறது. உடுமலை சுற்றுப்பகுதிகளில், 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வட கிழக்கு பருவ மழை காரணமாக, செடி மற்றும் காய்கள் பாதிக்கப்படும் என்பதால், சாகுபடி பரப்பு பெருமளவு குறைந்துள்ளது. இருப்பினும், மழைக்கு ஓரளவு பாதிக்காத வகையில், அதிக சாகுபடி செலவு பிடிக்கும் கொடி முறையில், குறைந்தளவு விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்துள்ள நிலையில், தொடர் மழையால் பயிர்கள் பாதித்து, மகசூல் குறைந்துள்ளது. இதனால், உடுமலை சந்தைக்கு தக்காளி வரத்து பெருமளவு குறைந்துள்ளது. கேரளா மாநிலம் மற்றும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வியாபாரிகள் வந்து, தக்காளி கொள்முதல் செய்து வருவதால், விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த வாரம், 14 கிலோ கொண்ட பெட்டி, ரூ.350 வரை மட்டுமே விற்று வந்த நிலையில், நேற்று,800 ரூபாய் வரை ஏலம் போனது. வியாபாரிகள் கூறியதாவது : பருவ மழை காரணமாக, தக்காளி நடவு குறைந்த நிலையில், ஒரு சில பகுதிகளில் கொடி முறையில் விவசாயிகள் தக்காளி பயிரிட்டுள்ளனர். தொடர் மழையால் தற்போதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், வழக்கமாக உடுமலை சந்தைக்கு, 50 முதல், 70 ஆயிரம் பெட்டிகள் வரை வரத்து இருந்தது, தற்போது, தற்போது, 5 முதல், 10 ஆயிரம் பெட்டிகள் மட்டுமே வரத்து உள்ளது. பிற மாவட்டங்களிலும் தக்காளி வரத்து இல்லாததால், உடுமலை சந்தைக்கு வியாபாரிகள் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், விலை உயர்ந்து வருகிறது. டிச., வரை இதே நிலை நீடிக்கும். இவ்வாறு, தெரிவித்தனர்.