உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சுதந்திர போராட்டத்துக்கு துப்பாக்கி; வரலாறு பேசும் உடுமலை நடுகற்கள்

சுதந்திர போராட்டத்துக்கு துப்பாக்கி; வரலாறு பேசும் உடுமலை நடுகற்கள்

உடுமலை : 'பாளையக்காரர்களின் சுதந்திர போராட்டத்துக்கு தேவையான துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் உடுமலை பகுதியில் உற்பத்தி செய்யப்பட்டது, நடுகற்களால் உறுதியாகியுள்ளது' என, உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் தெரிவித்தனர்.திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே பண்ணைக்கிணறு, திருமூர்த்திமலை, மெட்ராத்தி, கடத்துார் உள்ளிட்ட இடங்களில், பழமையான நடுகற்கள் உள்ளன. இவற்றில் உள்ள புடைப்பு சிற்பங்களை, உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் தொடர் ஆய்வு செய்து வருகின்றனர்.அக்குழுவினர் கூறியதாவது:உடுமலையில் கண்டறியப்பட்ட பெரும்பாலான நடுகல் புடைப்பு சிற்பங்களில், துப்பாக்கி இடம் பெற்றுள்ளது. இதனால், ஆங்கிலேயருக்கு எதிரான போரில், இப்பகுதியின் முக்கிய பங்களிப்பு தெரிய வருகிறது.கி.பி., 1800ம் ஆண்டை சேர்ந்த இந்த நடுகற்கள், ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில், தளி உள்ளிட்ட பாளையக்காரர்கள் போரிட்டதும், இதற்காக மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள தளிஞ்சியில் துப்பாக்கி தயாரிப்பதற்கான தொழிற்சாலை இருந்ததையும் உறுதிப்படுத்துகிறது.விருப்பாட்சி கோபால நாயக்கர் தலைமையிலான தீபகற்ப கூட்டணிக்கு, உடுமலை தளிஞ்சி மலைப்பகுதியில் இருந்து 'துவக்கு' எனப்படும் துப்பாக்கிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதனால், ஆங்கிலேய படை கம்பெனிகள், அமராவதிநகரில் நிரந்தரமாக தங்கியிருந்தது, ஆவணங்களில் தெரிய வந்து உள்ளது.பாளையக்காரர்கள் வீழ்ச்சிக்கு பின், இந்த சிலைகளுக்கு ஆங்கிலேயர்களால் ஆபத்து ஏற்படும் என்பதால், நடுகல் சிற்பங்களை பதுக்கி வைத்து, கிராம மக்கள் வழிபட்டு வந்துள்ளனர்.கோவில் புனரமைப்பு மற்றும் நாட்டார் வழிபாடுகளால், இச்சிலைகள் தற்போது வெளியே வரத்துவங்கியுள்ளன. துப்பாக்கியுடன் கூடிய சில பழங்கால சிற்பங்கள், திருமூர்த்திமலை கட்டுமான பணிகளின் போது கிடைத்தன.பாளையக்காரர்களின் சுதந்திர போராட்டத்துக்கு, துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை உற்பத்தி செய்த முக்கிய பகுதியாக, உடுமலை இருந்துள்ளது. இத்தகைய தரவுகளை சேகரித்து, தொல்லியல் துறைக்கு சமர்ப்பித்து, நடுகற்களை பாதுகாக்க வலியுறுத்தியுள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை