திருப்பூர்;'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், சவுக்கு மரக்கன்றுகள் நட்டு வளர்த்த பெண் விவசாயி, மூன்றே ஆண்டுகளில், செலவே இல்லாமல், 40 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளார். இதை பசுமை ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவாக, 'வெற்றி' அமைப்பு சார்பில், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம் துவங்கப்பட்டது. கடந்த ஒன்பது ஆண்டுகளில், 18 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன; ஐநுாறுக்கும் அதிகமான குறுங்காடுகள் உருவாக்கப்பட்டுள்ளன.இத்திட்டத்தின் கீழ், திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் ஒன்றியம், பெதப்பம்பட்டி அடுத்துள்ள, லிங்கமநாயக்கன்புதுாரில், சித்ரா கிரிராஜ் என்பவரின், 20 ஏக்கர் நிலத்தில், கடந்த 2020ம் ஆண்டில், சவுக்கு மரக்கன்றுகள் நடப்பட்டன. ஆங்கிலப்புத்தாண்டு பரிசு
சித்ரா கிரிராஜ் கூறியதாவது:இந்திய வன மரபியல் ஆராய்ச்சி மற்றும் மரப்பெருக்கு நிறுவனம் உருவாக்கிய வீரியமான சவுக்கு மரக்கன்றுகளை நட்டோம். பின், சொட்டுநீர் மூலம், தண்ணீர் மட்டும் பாய்ச்சினோம்; வேறு எந்த செலவும் செய்யவில்லை. மூன்று ஆண்டுகள் மரம் வளர்த்தோம்; இன்று, ஆங்கிலப் புத்தாண்டுக்கான பரிசு போல், 40 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. தென்னை சாகுபடியில் கூட இவ்வளவு வருவாய் கிடைக்காது; சவுக்கு மரங்கள் மிக உயரமாக வளர்ந்ததால், மூன்று துண்டாக வெட்டி எடுத்துசெல்கின்றனர். எடை பார்த்ததும், உடனுக்குடன் பணம் கிடைத்துவிடுகிறது. மீண்டும், சவுக்கு மரங்களையே நடவு செய்ய திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார். 'தினமலர்' நாளிதழ் பங்களிப்பு
'வெற்றி' அமைப்பின் தலைவர் சிவராம் கூறுகையில், ''மேட்டுப்பாளையம் வனக்கல்லுாரி, இந்திய வனமரபியல் ஆராய்ச்சி மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தின் வழிகாட்டுதலுடன், 'தினமலர்' நாளிதழ் பங்களிப்புடன், இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். ஆண்டுதோறும், இரண்டு லட்சம் வீதம், ஒன்பது ஆண்டுகளில், 18 லட்சம் மரக்கன்றுகள் நட்டுள்ளோம். விவசாயிகளுக்கு, எதிர்பாராத அளவு, வருவாய் கிடைக்கிறது,'' என்றார். ''விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்காமல், நஷ்டம் ஏற்படுவதாக வருந்தும் விவசாயிகளுக்கு மத்தியில், முதலீடே இல்லாமல், அதிகளவில் வருவாய் ஈட்ட முடிவது, 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டக்குழுவுக்கு கிடைத்த வெற்றி'' என, பசுமை ஆர்வலர்களும், விவசாயிகளும் பாராட்டி வருகின்றனர்.