நாற்று நட தயாராக ரோடு வேதனையில் கிராம மக்கள்
உடுமலை;கிராம இணைப்பு ரோடு உருக்குலைந்து பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறியும், குடிமங்கலம் ஒன்றிய நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்காததால், மக்கள் அதிருப்தியில் உள்ளனர். குடிமங்கலம் ஒன்றியம், சோமவாரப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பெதப்பம்பட்டியில் இருந்து வெள்ளியம்பாளையத்துக்கு செல்ல இணைப்பு ரோடு உள்ளது. இந்த வழித்தடத்தை அதிகளவு விவசாயிகளும், வெள்ளியம்பாளையம், கோட்டமங்கலம் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் வாகன ஓட்டுநர்களும் பயன்படுத்தி வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன் பெய்த தொடர் மழையால், ரோடு சேதமடைந்தது. அதன்பின்னர், எவ்வித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளவில்லை. இதனால் சிறிய குழிகள் பள்ளங்களாக மாறி, அரை கி.மீ.,க்கும் அதிகமான பகுதி பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறி விட்டது. ரோடு முழுவதும் அரிக்கப்பட்டு, குழியாக மாறியிருப்பதால், இரவு நேரங்களில் வாகன ஓட்டுநர்கள் நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகி வருகின்றனர். ரோட்டை புதுப்பிக்க, சோமவாரப்பட்டி ஊராட்சி நிர்வாகம், குடிமங்கலம் ஒன்றிய நிர்வாகத்துக்கு பல முறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. எனவே வரும் பருவமழை சீசனில், ஒன்றிய நிர்வாகத்தை கண்டித்து, ரோட்டிலுள்ள பள்ளங்களில், நாற்று நட்டு தங்கள் எதிர்ப்பை காட்ட அப்பகுதி மக்கள் தீர்மானித்துள்ளனர்.