பல்லடம்: திருப்பூர் அருகே, சின்னக்காளிபாளையம் கிராமத்தில், மாநகராட்சியின் குப்பைகளை கெட்ட எதிர்ப்பு தெரிவித்து, இடுவாய், 63 வேலம்பாளையம், ஆறுமுத்தாம்பாளையம், கரைப்புதுார் ஆகிய நான்கு கிராம மக்களும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நடந்து வந்த நிலையில், இங்குள்ள, மாநகராட்சி இடத்தின் ஒரு பகுதியில், குப்பை கொட்ட கோர்ட் அனுமதி வழங்கியது. கோர்ட் உத்தரவை மதிப்பதாகவும்; இருப்பினும், குப்பை கொட்ட ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்ற நிலைப்பாட்டில் தீர்க்கமாக உள்ள பொதுமக்கள், சுப்ரீம் கோர்ட்டில் இதுதொடர்பாக மேல்முறையீடும் செய்துள்ளனர். குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இன்று மாலை, பா.ஜ., முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, சின்னக் காளிபாளையத்தில் உள்ள போராட்ட பந்தலுக்கு இன்று மாலை, 4:00 மணிக்கு வருகை தர உள்ளதாகவும், அங்கு கூடும் பொதுமக்கள் மத்தியில், கண்டன உரை ஆற்ற உள்ளதாகவும் போராட்ட குழுவினர் தெரிவித்தனர். போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அண்ணாமலை பங்கேற்பதால், இன்று, நான்கு கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள், பொதுமக்கள் மற்றும் இளைஞர்களை திரட்டவும் போராட்ட குழுவினர் தயாராகி வருகின்றனர். அண்ணாமலை வந்து சென்ற பின், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து, தொடர்ச்சியான போராட்டங்களை தீவிரப்படுத்துவது எனவும் போராட்டக் குழுவினர் மற்றும் நான்கு கிராம மக்கள் தீர்மானித்துள்ளனர்.