தோட்டக்கலைத்துறையின் சிறப்பு திட்டத்தில் பண்ணை அமையுமா? இடம் தேர்வுடன் கிடப்பில் போட்டதால் அதிருப்தி
உடுமலை : உடுமலையில் தோட்டக்கலை பண்ணை மற்றும் பூங்கா அமைக்கும் திட்டம், பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால், பல்வேறு பாதிப்புகளை சந்திக்கும், விவசாயிகளும், பூங்காவை எதிர்பார்த்த மக்களும் அதிருப்தியில் உள்ளனர்.உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரங்களில், கிணற்றுப்பாசனத்துக்கு, காய்கறி சாகுபடி பிரதானமாக உள்ளது. குறிப்பாக, தக்காளி, கத்தரி, சின்னவெங்காயம், பச்சை மிளகாய் போன்ற காய்கறிகள் ஆண்டு முழுவதும் இப்பகுதியில், சாகுபடியாகிறது.உடுமலை வட்டாரத்தில் மட்டும், மா, தென்னை என தோட்டக்கலை சார்ந்த சாகுபடிகள் மட்டும், 20 ஆயிரம் ஹெக்டேர் வரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, தோட்டக்கலைத்துறை சார்ந்த மானியத்திட்டங்கள் மற்றும் செயல்விளக்க திடல்கள் அமைக்க, உடுமலை பகுதிக்கு அதிக தேவையுள்ளது. இந்நிலையில், கடந்த, 2019ல், அரசின் தோட்டக்கலை பண்ணை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.ஆனால், பண்ணை அமைப்பதற்கான இடம் தேர்வு செய்வதில், குளறுபடி ஏற்பட்டது. திருப்பூர் - திண்டுக்கல் மாவட்ட எல்லையில், மடத்துாரில், 10 ஏக்கர் பரப்பளவில், இடம் தேர்வு செய்யப்பட்டு நீண்ட இழுபறிக்குப்பிறகு பண்ணை செயல்பாட்டுக்கு வந்தது.பண்ணை அமைந்துள்ள இடத்தில், அதிகளவு பாறைகள் இருப்பதால், நாற்று உற்பத்தி, மரக்கன்று உற்பத்திக்கு திணறும் நிலை காணப்படுகிறது.மேலும், போதிய தண்ணீர் வசதியில்லாததால், மழை இல்லாத போது, அனைத்து பணிகளும் பாதிக்கும் அபாயம் ஏற்படுகிறது. விவசாயிகள் தயக்கம்
உடுமலையில் இருந்து, 25 கி.மீ., க்கும் அதிகமான தொலைவு பயணிக்க வேண்டியிருப்பதால், நாற்றுகளை பெறவும், இதர பணிகளுக்காகவும், விவசாயிகள் தோட்டக்கலை பண்ணைக்கு செல்ல தயக்கம் காட்டுகின்றனர்.இதனால், பண்ணையை இடம் மாற்ற வேண்டும் என, விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.கடந்த 2022ல், தமிழக அரசு, 24 இடங்களில், தோட்டக்கலை பூங்கா அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி திருப்பூர் மாவட்டத்துக்கு, உடுமலையில், பூங்கா அமைக்க இடத்தேர்வு பணிகள் நடந்தது. அரசு நிலம் இல்லாதபட்சத்தில், கோவில் நிலங்களை தேர்வு செய்யவும் அறிவுறுத்தப்பட்டது.அதன்படி, உடுமலையில் பிரசன்ன விநாயகர் கோவிலுக்கு சொந்தமான, 35 ஏக்கர் நிலத்தில், பிரமாண்ட தோட்டக்கலை பூங்கா அமைக்க, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, முன்மொழிவு தயாரிக்கப்பட்டது.தொடர்ந்து, ஹிந்து அறநிலையத்துறை, தோட்டக்கலைத்துறையை ஒருங்கிணைத்து, அதற்கான முன்மொழிவும் தயாரிக்கப்பட்டது. முன்மொழிவில், தேர்வு செய்யப்பட்ட நிலத்தில், தோட்டக்கலை சார்ந்த நாற்று, மரக்கன்றுகள் உற்பத்திக்கான பண்ணை அமைக்கலாம்.மேலும், நகரின் அருகில் இருப்பதால், தோட்டக்கலை சார்பில், அழகிய பூங்கா அமைக்கவும், தோட்டக்கலைத்துறையினர் திட்டமிட்டனர். நகரில், பூங்கா எதுவும் இல்லாத நிலையில், இத்திட்டத்துக்கும், அரசின் அறிவிப்புக்கும் மக்களிடையே அதிக வரவேற்பு இருந்தது. செயல்பாட்டுக்கு வர எதிர்பார்ப்பு
இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், விவசாயிகளுக்கு பலனுள்ளதாகவும், பூங்கா வாயிலாக அரசுக்கு வருவாயும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முன்மொழிவுடன் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.தற்போது ஒவ்வொரு சீசனிலும், குறித்த நேரத்தில் காய்கறி நாற்று கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கின்றனர்.தேர்வு செய்யப்பட்ட இடமும், புதர் மண்டி, சீமைகருவேலன் காடாக மாறி, சமூக விரோத செயல்களின் மையமாக மாறி விட்டது. நகரின் அருகிலுள்ள காலி நிலத்தை முறையாக பயன்படுத்தும் வகையில், கிடப்பில் போடப்பட்ட திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.காய்கறி சாகுபடி பரப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், திட்டத்துக்கு முக்கியத்துவம் தந்து, தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்யவும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.