உடுமலை : மண் கால்வாய்களை, தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் துார்வார, பொதுப்பணித்துறை அனுப்பிய கருத்துருவுக்கு, ஊரக வளர்ச்சித்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை; திருப்பூர் மாவட்ட நிர்வாகமும் மவுனம் சாதிப்பதால், பி.ஏ.பி., விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர்.பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்துக்கு வழக்கமாக ஆக., மாதத்தில், திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும்.மண்டல பாசனத்துக்கு இரண்டு ஆண்டுகள் இடைவெளியில் தண்ணீர் திறக்கப்படுவதால், ஒவ்வொரு பாசனத்துக்கு முன்பும், விவசாயிகள் பல்வேறு பிரச்னைகளை சந்திக்க வேண்டியுள்ளது. குறிப்பாக, பாசன கால இடைவெளியில் மண் மூடி காணாமல் போகும் பகிர்மான கால்வாய்களை துார்வார போராட வேண்டியுள்ளது. பிரதான, கிளை கால்வாயில் திறக்கப்படும் தண்ணீர், விளைநிலங்களுக்கு பகிர்மான கால்வாய் வழியாகவே செல்ல வேண்டும்.இக்கால்வாய்களுக்கு கான்கிரீட் அமைக்கப்படவில்லை; எனவே, குறிப்பிட்ட இடைவெளியில் மண் கால்வாய்களை துார்வார வேண்டும்.முன்பு கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மண் கால்வாய்கள் பராமரிக்கப்படும். தற்போது, இச்சங்கங்களுக்கு அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்வதில்லை.எனவே ஒவ்வொரு பாசன காலத்துக்கு முன்பும், விவசாயிகள் தங்கள் பங்களிப்பு தொகையில், துார்வாரும் பணிகளை மேற்கொண்டு வந்தனர்.தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் செயல்பாட்டுக்கு வந்த பிறகு, அத்திட்ட பணியாளர்களை கொண்டு துார்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.நான்காம் மற்றும் முதலாம் மண்டல பாசனத்துக்கு, பற்றாக்குறையாகவே திருமூர்த்தி அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. போதிய மழையும் இல்லாததால், இரண்டாம் மண்டல பாசன காலத்தை இரு மாவட்ட விவசாயிகளும் அதிகளவு எதிர்பார்த்துள்ளனர்.எனவே, ஜூன் மாதத்தில் இருந்தே, பகிர்மான கால்வாய்களை துார்வார வேண்டும் என அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் தொடர்ந்து மனு அனுப்பி வந்தனர்.இதையடுத்து, பொதுப்பணித்துறை சார்பில், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணியாளர்களை கொண்டு பகிர்மான கால்வாய்களை துார்வாரி தர வேண்டும் என கருத்துரு அனுப்பினர். பணிகள் துவங்கவில்லை
திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தரப்பிலும், பகிர்மான கால்வாய்கள், வேலை உறுதியளிப்பு திட்டத்தில் துார்வாரப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை எவ்வித பணிகளும் துவங்கவில்லை.பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறையினர் மாறி, மாறி காரணங்களை மட்டும் தெரிவித்து வருகின்றனர்.திருப்பூர் மாவட்ட நிர்வாகமும், நடவடிக்கை எடுக்காமல் மவுனம் சாதிக்கிறது. விரைவில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில், செய்வதறியாது விவசாயிகள் தவித்து வருகின்றனர்.வாக்குறுதி அளித்து விட்டு மறக்கும் துறையினரால், அதிருப்தியும் அதிகரித்துள்ளது.ஒரு வாரத்துக்கும் அதிகமாக பணிகளை மேற்கொண்டால் மட்டுமே புதர் மண்டி, மண்மேடாக மாறியுள்ள கால்வாய்களை மீட்க முடியும்.எனவே உடனடியாக பணியானை வழங்கி, பணிகளை துவக்க திருப்பூர் கலெக்டர் உத்தரவிட வேண்டும்.