காற்றினால் வாழையில் சேதம்; விவசாயிகளுக்கு நஷ்டம்
உடுமலை; அதிக காற்றினால், வாழை இலைகள் கிழிந்து, மகசூல் பாதித்துள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். உடுமலை ஏழு குள பாசன திட்ட பகுதிகளில், வாழை சாகுபடி பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது. கதளி, நேந்திரன் முக்கிய ரகங்களாகும். கடந்த சில ஆண்டுகளாக, இலைத்தேவைக்காக பிரத்யேக ரகங்களை இப்பகுதி விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். முகூர்த்த சீசனில், வாழை இலைக்கு தேவை அதிகரித்து, நல்ல விலை கிடைக்கிறது. ஆறு மாத வளர்ச்சிக்குப்பிறகு, இலைகளை அறுவடை செய்கின்றனர். வழக்கமாக ஆடி மாதத்துக்கு பிறகு, உடுமலை பகுதியில், காற்றின் வேகம் குறையும். இந்தாண்டு, காற்றின் வேகம் தொடர்வதால், இலைகள் கிழிந்து மகசூல் பாதித்துள்ளது. விவசாயிகள் கூறுகையில், ' விநாயகர் சதுர்த்தியையொட்டி இலைக்கு நல்ல விலை கிடைத்தது. ஆனால், அறுவடை செய்ய முடியாமல், காற்றினால் இலைகள் கிழிந்து விட்டது,' என்றனர். தோட்டக்கலைத்துறையினர் கூறுகையில், 'வாழை சாகுபடியில், அகத்தி, சவுக்கு உள்ளிட்ட காற்றுத் தடுப்பான்களை, வரப்பில் பராமரிக்க வேண்டும். விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்,' என்றனர்.