திருப்பூர்: தாராபுரம் நகராட்சி, ரோட்டரி மஹாலில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி, நேற்று நடைபெற்றது. தாராபுரம் ஆர்.டி.ஓ. பெலிக்ஸ் ராஜா தலைமை வகித்தார். தாராபுரம் நகராட்சி, கொளத்துப்பாளையம், ருத்ராவதி, சின்னக்காம்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட, எட்டு கிராமங்களை சேர்ந்த, 650 பயனாளிகளுக்கு, 19.25 கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி ஆகியோர் வழங்கினர். அமைச்சர் சாமிநாதன் பேசுகையில், ''திருப்பூர் மாவட்டத்தில் முதல்கட்டமாக, 3 லட்சத்து 99 ஆயிரத்து 350 பெண்களுக்கு, மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இரண்டாவது கட்டத்தில், 55 ஆயிரத்து 108 பெண்கள், உரிமைத்தொகை பெற பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில், கடந்த 2021, மே 7ம் தேதி முதல், இதுவரை, நத்தம், இ- பட்டா, நகர்புற நில பட்டா, கிராம கணக்கில் மாறுதல் என, மொத்தம் 58 ஆயிரத்து 136 பட்டா வழங்கப்பட்டுள்ளது,'' என்றார்.