| ADDED : மார் 28, 2024 11:27 PM
ஆரணி:திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த குன்னத்துாரிலுள்ள, 15 வீதிகளில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அப்பகுதியைச் சேர்ந்த, 10க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், வாத்து வளர்க்கும் தொழில் செய்கின்றனர். இவர்கள், வாத்துகளை மேய்ச்சலுக்கு அப்பகுதியிலுள்ள ஏரிக்கு ஓட்டிச் செல்லும் போது, அப்பகுதியைச் சேர்ந்த தெருநாய்கள், வாத்துகளை கடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் வாத்து வளர்ப்பவர்கள், கோழி இறைச்சிக் கழிவுகளில் விஷத்தை கலந்து, அனைத்து வீதிகளிலும் வீசினர். இதை சாப்பிட்ட, 20 நாய்கள் மயங்கி உயிரிழந்தன.இறந்த நாய்களின் உடல்கள் தெருக்களில் ஆங்காங்கே அழுகிய நிலையில் கிடந்ததால், துர்நாற்றம் வீசத் தொடங்கியது. அப்பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து, பலியான, 20 நாய்களின் உடல்களை மீட்டு, கமண்டல நாகநதி ஆற்றங்கரையில் பள்ளம் தோண்டி புதைத்தனர்.மேலும், இறைச்சிக் கழிவுகளில் விஷம் வைத்து நாய்களை கொன்றவர்களை கண்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.