மணப்பாறை: முதல்வர் தொகுதிக்கு உட்பட்ட கிராமத்தில், திறந்தவெளியில் பெண்கள், இயற்கை உபாதைகளை கழிக்க வேண்டிய அவல நிலை நிலவுகிறது. கடைக்கோடி கிராமத்தின் மீது, முதல்வரின் கடைக்கண் பார்வை விழுமா? என்று கிராம மக்கள் ஏங்கி நிற்கின்றனர். திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தொகுதியின் மேற்கே கடைக்கோடியில் உள்ளது லட்சுமிபுரம் கிராமம். ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட இந்த கிராமம் மணப்பாறை யூனியன், கண்ணுடையான்பட்டி பஞ்சாயத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதில், 350க்கும் மேற்பட்ட குடிசை மற்றும் ஓடு வீடுகள் உள்ளன. பெரும்பாலன வீடுகளில் கழிவறை, குளியலறை வசதி அறவே இல்லை. இதனால், அந்த கிராம மக்கள் திறந்த வெளியில் இயற்கை உபாதைகளை கழிக்கவும், குளிக்கவும் செய்கின்றனர். இதுனால், பெண்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மணப்பாறை காட்டுப்பட்டி பிரிவு ரோடு அருகே மணப்பாறை நகராட்சிக்கு சொந்தமான பொது கழிப்பிடம் இருந்தது. மிகவும் பழுதடைந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன், இந்த கழிவறை இடிக்கப்பட்டது. அதே இடத்தில் மீண்டும் புதிய கழிவறை கட்ட பல்வேறு அரசியல் குறுக்கீடுகள் வந்ததால், அந்த கழிவறை கட்ட முடியாமல் போனது. இதனால், இந்த கழிவறையை பயன்படுத்தி வந்த லட்சுமிபுரம் கிராமத்து பெண்கள், மாணவியர், குழந்தைகள் திறந்த வெளியில் இயற்கை உபாதைகளை கழிக்க வேண்டிய நிலையில் உள்ளனர். விண்மதி மெட்ரிக்., பள்ளி அருகே உள்ள முட்புதர் பகுதியை இயற்கை உபாதை கழிக்க பெண்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதிகாலை அல்லது அந்திசாயும் நேரங்களில் இயற்கை உபாதைகளை கழிக்க செல்கின்றனர். அப்போது, விஷ ஜந்துக்கள் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். தவிர, பன்றி, நாய் போன்ற விலங்குகள் தொல்லைக்கும் பெண்கள் ஆளாகின்றனர். ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு, மூன்றாவது முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதா, தொகுதி வளர்ச்சிக்காக, 190 கோடி ரூபாயை வாரி வழங்கியுள்ளார். அதேவேளையில், ஸ்ரீரங்கம் தொகுதியின் கடைக்கோடையில் உள்ள தங்கள் கிராமத்தின் மீது ஜெயலலிதாவின் கடைக்கண் பார்வை படுமா? என்று ஏங்கித்தவிக்கின்றனர் லட்சுமிபுரம் கிராமத்து பெண்கள்.