உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / கண்டக்டர் தரக்குறைவு பேச்சு அரசு பேருந்து சிறைபிடிப்பு

கண்டக்டர் தரக்குறைவு பேச்சு அரசு பேருந்து சிறைபிடிப்பு

திருச்சி:திருச்சி மாவட்டம், மணப்பாறையை சேர்ந்தவர் சங்கீதபிரியா, 28. இவர், நேற்று மாலை தன் தாயுடன் திருச்சியில் இருந்து பழனி செல்லும் அரசு பஸ்சில், மணப்பாறை செல்ல ஏறினார். அப்போது, அவரது தாய் பஸ்சில் இருந்து இறங்கி கடைக்கு சென்றுள்ளார். இந்த நேரத்தில் பஸ் புறப்பட்டபோது, சங்கீதபிரியா, கண்டக்டர் அய்யம்பெருமாள், 49, என்பவரிடம், தாய் கீழே இறங்கி சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார். இதைக்கேட்ட கண்டக்டர், சங்கீதபிரியாவை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி, பஸ்சில் இருந்து கீழே இறக்கி விட்டுள்ளார். பின், பஸ் புறப்பட்டு விட்டது. இதுகுறித்து, சங்கீதபிரியா தன் கணவர் ஜீவாவிடம் மொபைல் போனில் தகவல் தெரிவித்தார். அவர் தன் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன், பொத்தமேட்டுப்பட்டி அருகே மணப்பாறை பிரிவு ரோட்டில் வந்த பழனி பஸ்சை சிறை பிடித்தார். கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடம் வந்து, பஸ்சை போலீஸ் ஸ்டேஷன் கொண்டு சென்று பேச்சு நடத்தினர். அப்போது கண்டக்டர் அய்யம்பெருமாள், தான் பேசியதற்கு இளம்பெண்ணிடம் மன்னிப்பு கேட்டதால், சமாதானம் ஏற்பட்டு, பஸ் பழனி புறப்பட்டு சென்றது. இந்த சம்பவம் மணப்பாறையில் பரபரப்பை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ