| ADDED : ஆக 20, 2024 04:42 AM
திருச்சி: திருச்சியில், நிலத்தை மோசடியாக அபகரித்த வக்கீலின் செயலால் விரக்தி அடைந்த முதியவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருச்சி, ஏர்போர்ட் ஜே.கே.நகரைச் சேர்ந்தவர் ஆரோக்கியம், 64. இவருக்கு திருமணம் ஆன, பார்வை குறைபாடுள்ள மகனும், மகளும் உள்ளனர். அப்பகுதியில் இவருக்கு சொந்தமாக, 3 கோடி ரூபாய் மதிப்பில் வீடு, நிலம் உள்ளன.அவற்றை தன் வாரிசுகளுக்கு பிரித்துக் கொடுக்க, வக்கீல் சுரேஷ் என்பவரை முதியவர் அணுகினார். வக்கீல் சுரேஷ், நாம் தமிழர் என்ற கட்சியில் நிர்வாகியாக உள்ளார். சொத்தை வாரிசுகளுக்கு பிரித்து கொடுப்பதாக கூறி, முதியவரிடம் கையெழுத்து வாங்கிய வக்கீல், தன் பெயருக்கு விற்க அதிகாரம் இருப்பதாக, மோசடியாக ஆவணம் எழுதி வாங்கி விட்டார். பின், அதன்மூலம், தன் மனைவி பெயருக்கு சொத்தை பெயர் மாற்றம் செய்து கொண்டார்.இதை தாமதமாக அறிந்த முதியவர், திருச்சி மாநகர குற்றப்பிரிவு 2ல் புகார் அளித்தார். போலீசார் விசாரணை சரியாக நடத்தவில்லை என கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த முதியவர், நேற்று முன்தினம் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.விமான நிலைய போலீசார் விசாரிக்கின்றனர்.