உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / நரிக்குறவர்கள் மிகவும் திறமைசாலிகள்

நரிக்குறவர்கள் மிகவும் திறமைசாலிகள்

திருச்சி: 'நரிக்குறவர்கள் மிகவும் திறமைசாலிகள், புத்திக்கூர்மையுடையவர்கள்' என, நரிக்குறவர்களுக்கு ஆதரவாக கலெக்டரிடம் முறையிட வந்த அமெரிக்கா, இங்கிலாந்து நாட்டினர் தெரிவித்தனர்.திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அடுத்த துவாக்குடி அருகே தேவராயநேரி என்ற கிராமம் உள்ளது. இப்பகுதியில் அதிகளவு நரிக்குறவ இன மக்கள் வசிக்கின்றனர். 'பெல்' நிறுவனம் ஆண்டுதோறும் ஒரு கிராமத்தை தத்தெடுத்து, அந்த கிராமத்துக்கான கல்வி, சுகாதாரம், வளர்ச்சி போன்றவற்றுக்கு உதவுகிறது.அதேபோல், நடப்பாண்டும் ஒரு கிராமத்தை 'பெல்' நிறுவனம் தத்தெடுக்க உள்ளது. எனவே, தங்கள் கிராமத்தை நடப்பாண்டு, 'பெல்' நிறுவனம் தத்தெடுக்க கலெக்டர் பரிந்துரைக்க வேண்டும் என, தேவராயநேரியை சேர்ந்த நரிக்குறவ பெண் சீதா, நரிக்குறவர் கல்வி மற்றும் நலச்சங்கம் செயலாளர் மகேந்திரன் ஆகியோர் கலெக்டர் ஜெயஸ்ரீயை சந்தித்து முறையிட்டனர். கலெக்டர் ஜெயஸ்ரீ இதுபற்றி 'பெல்' நிறுவனத்தினம் பேசுவதாக உறுதி அளித்துள்ளார்.அப்போது, அவர்களுடன் அமெரிக்காவை சேர்ந்த ஏஞ்சலா, ரெஜினா, இங்கிலாந்தை சேர்ந்த ரொபாகோ, குப்ளயே, ஆண்ட்ரூ, அமெரிக்கா வாழ் இந்திய வம்சாவழி ரெஜினாகபூர், கேரளாவை சேர்ந்த டிண்டு ஆகியோரும் உடன் வந்தனர்.இதுகுறித்து டிண்டு கூறியதாவது:நாங்கள் அனைவரும் ஒவ்வொரு தொண்டு நிறுவனத்திலிருந்து வந்துள்ளோம். நரிக்குறவ மக்களுடன் தங்கி அவர்களுடைய வாழ்க்கை குறித்தும், அவர்களின் தொழில்நுட்பம் குறித்தும் அறிந்து வருகிறோம். நான் ஸ்கில்ஷேர் அமைப்பு மூலம் கேரளாவிலிருந்து வருகிறேன்.நரிக்குறவ மக்கள் சுகாதாரமின்றி வாழ்கின்றனர். அவர்களுக்கு சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். பெரும்பாலும் நரிக்குறவ மக்கள் மருத்துவமனைக்கு சென்று பிரசவம் பார்ப்பதில்லை. வீட்டிலேயே மகப்பேறு பார்க்கின்றனர். இதனால், நிறைய குழந்தைகள், தாய்மார்கள் இறக்க நேரிடுகிறது.இதைப்பற்றி யாரும் கண்டுகொள்வதில்லை. நாங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்திய பிறகு, தற்போது, 98 சதவீதம் பெண்கள் மருத்துவமனைக்குச் சென்று பிரசவம் பார்க்கின்றனர். மேலும் சமயபுரம் நம்பர் 1 டோல்கேட், பூலாங்குடி, வேதராயநேரி ஆகிய இடங்களில் ஐ.சி.டி.எஸ்., (குழந்தைகள் வளர்ச்சி) திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதேபோல், கீரனூர், புதுக்குடி ஆகிய பகுதிகளிலும் இத்திட்டத்தை செயல்படத்த முயற்சித்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.நரிக்குறவர்கள் தொழில்குறித்து அறிந்து கொள்ள தேவராயநேரியில் தங்கியுள்ள அமெரிக்காவை சேர்ந்த ஏஞ்சலா கூறுகையில், ''நரிக்குறவர்கள் மிகவும் புத்திசாலிகள். அவர்களடைய கைவேலைப்பாடு ஊசி, பாசி, மணி மாலைகள் அழகாக உள்ளது. கண் ஒரு பக்கம் இருந்தாலும், அவர்களுடைய கைகள் வேலையை பார்க்கும். அந்தளவுக்கு திறமைசாலிகள். நான் 'நெஸ்ட்' அமைப்பிலிருந்து வந்துள்ளேன். இவர்களது வாழ்வாதாரத்தை பெருக்கும் வகையில், அவர்களுடைய கலைப்படைப்புகளை வெளிநாடுகளில் விற்பனை செய்ய உதவுகிறேன். அவர்களுடைய கலையை நானும் கற்று வருகிறேன். நான் கொரியன் வம்சாவழியை சேர்ந்தவள். இதுபோன்ற நுணுக்கமான வேலைகளில் சீனா, கொரியன்களை விட இவர்கள் தேர்ந்தவர்கள் என்றே கூறலாம்,'' என்றார்.அமெரிக்கா வாழ் இந்திய வம்சாவழியை சேர்ந்த ரெஜினாகபூர், ''நரிக்குறவர்களின் வாழ்க்கை முறை மிகவும் வித்தியாசமாக உள்ளது. அவர்களுடையை தொழில் திறமையை கற்றுக்கொள்ள வந்துள்ளேன்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை