| ADDED : ஜூலை 08, 2024 04:53 AM
வானுார்: ராயப்பேட்டையில் இருந்து ஆப்பிரம்பட்டு செல்லும் சாலை படுமோசமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.வானுார் தொகுதியில் உள்ள ராயப்புதுப்பாக்கம், ஆப்பிரம்பட்டு, நெசல் ஆகிய கிராமங்களில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் புதுச்சேரி, ஆரோவில், திருச்சிற்றம்பலம் கூட்ரோடு, வானுார் உள்ளிட்ட பகுதிகளுக்கு பல்வேறு பணிகளுக்கு சென்று வருகின்றனர்.குறிப்பாக பள்ளி, கல்லுாரி மாணவர்கள் புதுச்சேரி, வானூர் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லுாரிகளுக்குச் சென்று படித்து வருகின்றனர். மேலும், சஞ்சீவிநகர், ஆலங்குப்பம் மற்றும் அதைச்சுற்றியுள்ள கிராம மக்களும், காலாப்பட்டு, கனகசெட்டிக்குளம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் இந்த சாலை வழியாக தான் சென்று வருகின்றனர்.குறிப்பாக ராயப்பேட்டையில் துவங்கி ஆப்பிரம்பட்டு வரை உள்ள 4 கி.மீ., துார தார் சாலையில் ஆங்காங்கே ஜல்லிகள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. மழைக் காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் இரு சக்கர வாகன ஓட்டிகள் பள்ளம் இருப்பது தெரியாமல் விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.ஏற்கனவே இப்பகுதிக்கு பஸ் வசதி கிடையாது.இதனால், தங்களிடம் இருக்கும் வாகனத்தை வைத்தே பல்வேறு வேலைகளுக்கு சென்று வருகின்றனர். தற்போது சாலையும் படுமோசமாக உள்ளதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.இது குறித்து அப்பகுதி மக்கள், அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை சாலையை புதுப்பிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பொது மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு சாலையை புதுப்பிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.