| ADDED : ஏப் 04, 2024 11:10 PM
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் நிலைகண்காணிப்பு குழுவினர் வாகன தணிக்கையை மாவட்ட தேர்தல் அதிகாரி ஆய்வு செய்தார் . விழுப்புரம் லோக் சபா தொகுதிக்குட்பட்ட விக்கிரவாண்டி தொகுதியில் தலா 3 நிலை கண்காணிப்பு குழு, தேர்தல் பறக்கும்படை,ஒரு வீடியோ கண்காணிப்பு குழுவினர் என 7 குழுவினர் என ஒரு நாளைக்கு 21 குழுவினர் தொகுதியில் பல்வேறு இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மாலை விக்கிரவாண்டி டோல் பிளாசா பகுதியில் நிலை கண்காணிப்பு குழு அலுவலர் சரவணன் தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர் அங்கு வந்த மாவட்ட தேர்தல் அதிகாரி பழனி, கண்காணிப்பு குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபடுவது குறித்து ஆய்வு செய்து பின்னர் அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார். பின்னர் விக்கிரவாண்டி தொகுதி தென்னமாதேவி டோல் பிளாசா அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த கண்காணிப்பு குழுவினரையும் மாவட்ட தேர்தல் அதிகாரி ஆய்வு செய்தார். தாசில்தார் யுவராஜ்,வட்ட வழங்கல் அலுவலர் விமல்ராஜ், தொகுதி உதவி தேர்தல் செலவின பார்வையாளர் ஞானவேல், வருவாய் ஆய்வாளர் தெய்வீகன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.