| ADDED : ஏப் 17, 2024 11:39 PM
ஜெ.,மறைவிற்கு பிறகு சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில், டி.டி.வி.தினகரன் போட்டியிட்டார். தேர்தலுக்கு முன், வீடு தோறும் வாக்காளர்களுக்கு ரூ.20 டோக்கன் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற பிறகு ரூ.20ஐ கொடுத்தால் பணம் கொடுப்பதாக உறுதி கூறப்பட்டது. தினகரன் அந்த தேர்தலில் வெற்றி பெற்றார். இந்நிலையில், தமிழகத்தில் வரும் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதில் போட்டியிடும் பிரதான கட்சிகளான தி.மு.க.,அ.தி.மு.க.,உள்ளிட்ட கட்சிகள் பல்வேறு தொகுதிகளில் வாக்காளர்களிடம் தலா ரூ.300 லிருந்து ரூ.200 வரை பணமாக கொடுத்து ஆதரவு திரட்டி வருகின்றனர். இதேபோல் விழுப்புரம் லோக்சபா தொகுதியில், தி.மு.க.,ஆதரவு பெற்ற வி.சி.,கட்சி வேட்பாளர், அ.தி.மு.க.,வேட்பாளர் ஆகியோர் சார்பில் வாக்காளர்களுக்கு தலா ரூ.200 கொடுக்கப்பட்டு வருகின்றது. ஆரணி லோக்சபா தொகுதியில் போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி(தனி) விழும்புரம் மாவட்டத்தில் செஞ்சி, மயிலம் ஆகி சட்டசபை தொகுதியில் உள்ளன. இங்கு தி.மு.க.,சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சார்பில், வாக்காளர்களுக்கு நேரடியாக பணம் கொடுக்காமல், ஆர்.கே.நகரில் தினகரன் ரூ.20 டோக்கன் கொடுத்தது போல், தி.மு.க.,வினர் வீடு வீடாக டோக்கன்(கருணாநிதி படம் போட்ட நுாற்றாண்டு விழா) வழங்கி வருகின்றனர். இந்த டோக்கனை தேர்தல் முடிந்த பிறகு 20 ம் தேதி கொடுத்து பணம்(ரூ.200)வாங்கிக்கொள்ளுமாறு மறைமுகமாக உறுதி அளிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் ஆரணி தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க.,வேட்பாளர் சார்பில் வாக்காளர்களுக்கு கொடுக்கவில்லை.--நமது நிருபர்-