உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / குரும்புரம் காப்புக்காட்டில் அழிந்து வரும் மூலிகை மற்றும் வன விலங்குகள் மர்ம நபர்கள் அட்டூழியம்; வனத்துறை சைலண்ட்

குரும்புரம் காப்புக்காட்டில் அழிந்து வரும் மூலிகை மற்றும் வன விலங்குகள் மர்ம நபர்கள் அட்டூழியம்; வனத்துறை சைலண்ட்

மரக்காணம் அடுத்த குரும்புரம் காப்புக்காட்டில் இரவு நேரத்தில் மூலிகை மற்றும் வன விலங்குகளை மர்ம நபர்கள் வேட்டையாடுவதை தடுக்க வனத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் - மரக்காணம் சாலையில் உள்ளது குரும்புரம் காப்புக்காடு. இந்த காப்புக்காடு, 650 ஏக்கர் பரப்பளவில் உலர் வெப்பமண்டல காடுகளில் தமிழ்நாட்டில் முதல் இடத்தில் உள்ளது.இக்காட்டில், அரியவகை மூலிகையான எலும்பூட்டி, சித்தர் கொடி, கூழாமணி, ஊசிலை, பேய்விரட்டி, சீண்டில் உள்பட 240 மூலிகை வகைச் செடி, கொடிகள் உள்ளன. மேலும், வன விலங்குகனான மான், மயில், நரி, முயல், காட்டுப்பன்றி, உடும்பு, எறும்புத்தின்னி போன்றவைகளும் அதிகளவு உள்ளன.இந்த காடுகளை ஆய்வு செய்ய வெளிநாடுகளில் காடுகள் மற்றும் மூலிகை வனங்களை ஆய்வு செய்யும் கல்லுாரி மாணவர்கள் ஆண்டுதோறும் வந்து செல்கின்றனர்.இந்நிலையில், குரும்புரம் காப்புக் காட்டைச் சுற்றி பாதுகாப்பு வேலிகள் அமைக்காததால் மூலிகைச் செடிகள் மற்றும் மரங்களை வெட்டி சிலர் வழியாகவும், வாகனங்கள் செல்ல பாதையாகவும் பயன்படுத்தி வருகின்றனர்.இது குறித்து வனத்துறையினரிடம் பொதுமக்கள் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. மேலும், பகல் நேரத்தில் வனத்துறையினர் பெயரளவில் இந்த பகுதிக்கு வந்து சாலையிலேயே நின்று பார்த்துவிட்டுச் சென்று விடுகின்றனர். இரவு நேரத்தில் வனத்துறையினர் ரோந்து வருவதில்லை.இதை மர்ம நபர்கள் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பகல் மற்றும் இரவு நேரங்களில் அறிய வகையான மூலிகையை வெட்டி எடுத்து சென்று வெளியூர்களில் விற்பனை செய்து வருகின்றனர்.மேலும் முள்ளம்பன்றி, கட்டுப்பன்றி, முயல், மயில், உடும்பு உள்ளிட்டவைகளை வேட்டையாடிச் செல்கின்றனர். சிலர், முள்ளம்பன்றி கறியை சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும் என இரவு நேரங்களில் முள்ளம்பன்றியை வலை வைத்து பிடித்து கிலோ 1,000 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர்.முள்ளம்பன்றி கறிகளை எடுத்து கொண்டு தோல்களை சாலையோரத்தில் வீசிவிட்டு செல்கின்றனர். இது போன்ற தகவல்கள் வனத்துறைக்கு நன்கு தெரிந்தும் கண்டும், காணாமலும் உள்ளனர்.இதே நிலை நீடித்தால் வரும் காலங்களில் காப்புக் காடுகளில் உள்ள மூலிகை, மற்றும் வன விலங்குகள் அழிந்து போகும்.-நமது நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி