உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / உயிரை பணயம் வைத்து காத்திருக்கும் பயணிகள்: விக்கிரவாண்டி ரயில் நிலையத்தில்தான் இந்த கூத்து

உயிரை பணயம் வைத்து காத்திருக்கும் பயணிகள்: விக்கிரவாண்டி ரயில் நிலையத்தில்தான் இந்த கூத்து

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி ரயில் நிலையத்தில் 2 நடைமேடைகள் இருந்தும் ரயிலை நடைமேடை அல்லாத நடுவில் உள்ள டிராக்கில் நிறுத்தி ஆபத்தான நிலையில் பயணிகளை ஏற்றிச் செல்லும் நிலை உள்ளது. இதற்கு ரயில்வே உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.விக்கிரவாண்டி ரயில் நிலையத்திலிருந்து விக்கிரவாண்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் வசிப்பவர்கள் தினமும் பணி நிமித்தம் காரணமாக சென்னைக்கு சென்று வருகின்றனர்.ரயில் நிலையத்தில் 1வது மற்றும் 2வது நடைமேடைகள் உள்ளது. இதன் நடுவே 4 ரயில் டிராக்குகள் உள்ளன. வழக்கமாக முதலாவது நடைமேடையில் சென்னையிலிருந்து விழுப்புரம் நோக்கிச் செல்லும் ரயில்கள் நின்று பயணிகளை ஏற்றியும், இறக்கியும் செல்கின்றன. இரண்டாவது 2வது நடைமேடையில் சென்னை நோக்கிச் செல்லும் ரயில்கள் ஒரு நிமிடம் மட்டுமே நின்று பயணிகளை ஏற்றியும், இறக்கியும் செல்வது வழக்கம். இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன் இந்த இரண்டாவது நடைமேடையில் டிராக்ககில் சரக்கு ரயில் பெட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இதனால் சென்னை நோக்கிச் செல்லும் ரயில்கள் இரண்டாவது நடைமேடையில் நிறுத்த முடியாததால், இரண்டு நடைமேடைகளுக்கும் இடையே உள்ள மூன்றாவதாக டிராக்கில் நிறுத்தப்படுகிறது. இந்த டிராக்கில் நடைமேடை இல்லாததால் பயணிகள் ரயிலில் இருந்த இறங்கவும், ஏறவும் முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும், ரயில் வரவுக்காக ஆபத்தான நிலையில் இரண்டாவது டிராக்கின் நடுவில் நின்று காத்திருக்கின்றனர்.சில நேரங்களில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் கடந்து செல்லும் போது விபத்து ஏற்பட்டு உயிர் பலி ஏற்படும் நிலை உள்ளது. இந்த ரயிலை 1வது நடைமேடையில் நிறுத்த டிராக்கில் நிறுத்தினால், பயணிகளுக்கு வசதியாக இருக்கும். இல்லையென்றால் சரக்கு ரயில் பெட்டிகளை வேறு டிராக்கில் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் அலட்சியமாக இருப்பதால், 3வது டிராக்கில் நிற்கும் ரயிலில் ஏற முதியோர், ஊனமுற்றோர் என அனைவரும் அவதிப்படுகின்றனர். எனவே சம்மந்தப்பட்ட ரயில்வே துறை உயர் அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

M Sundaram
மே 01, 2024 10:28

இது மோசமான, மனிதாபிமானமற்ற செயல் இரயில்வே ஊழியர்கள் பலர் தங்களை பெரிய இவர்கள் என்ற மனப்பான்மையில் மெத்தனப் போக்கில் பணி செய்கின்றனர் சேவை மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும்


Gopinathan S
ஏப் 30, 2024 17:51

பொது மக்களை அலைக்கழித்தல் இதுதான் உண்மை அரசு ஊழியர்கள் இவ்வாறு நடந்து கொள்வது அவர்களுக்கு ஒரு சந்தோஷத்தை தருகிறது


அப்புசாமி
ஏப் 30, 2024 16:10

ரெண்டு பக்கமும் வேற டிரெய்ன் வராத மாதிரி பக்கத்து ஸ்டேஷன்களில் சொல்லி வெச்சிருக்காங்களாம். ரயில்வேல அமைச்சர்லேருந்து லைன்மேன் வரை எல்லோரும் அதிபுத்தி சாலிகள்.


RAJA68
ஏப் 30, 2024 12:27

ரயில் நிலைய அதிகாரிகளுக்கு மக்களின் உயிரைப் பற்றி கவலை இல்லை. கோமாளித்தனமாக வேலை செய்கிறார்கள். இப்படித்தான் தாம்பரம் ரயில் நிலையத்தில் முதலாவது மற்றும் இரண்டாவது நடைமேடையில் கடற்கரை நோக்கி செல்லும் ரயில்கள் நின்று கொண்டிருக்கும். திடீரென்று அறிவிப்பு வரும் கடற்கரை நோக்கி செல்லும் அடுத்த ரயில் நான்காவது நடைமேடையில் வந்து கொண்டுள்ளது என்று. நான்காவது நடைமேடையில் வந்து கொண்டுள்ள ரயில் செங்கல்பட்டில் இருந்து வரும் ரயிலாக இருக்கும் அதில் ஏற்கனவே கூட்டமாக இருக்கும். இப்படி திடீர் அறிவிப்பால் முதலாவது நடைமேடயில் காத்திருக்கும் பயணிகள் தாறுமாறாக இறங்கி ரயில் பாதையை கடந்து நான்காவது நடைமேடைக்கு செல்வர். திறமையான நபர்கள் குதித்து எழுந்து லாங் ஜம்ப் செய்வார்கள். முடியாதவர்கள் ரயில்வே துறையை சபித்துக் கொண்டு சுற்றி செல்வார்கள். ஏற்கனவே முதலாவது மற்றும் இரண்டாவது நடை மேடையில் இருக்கும் ஏதாவது ஒரு ரயிலை கடற்கரைக்கு விட்டிருக்கலாம் ஆனால் அவர்களின் திறமை அற்ற நிர்வாகத்தின் காரணமாக மக்களை அலைக்கழிப்பது என்ற ஒரே நோக்கத்தில் நான்காவது நடைமேடைக்கு அனுப்புவார்கள். மும்பையில் இப்படி எல்லாம் செய்தால் நிலைய அதிகாரிக்கு அடி தான் விழும். இவர்கள் எல்லாம் அங்கே சென்று வேலை செய்தால் வேலையை ராஜினாமா செய்து விட்டு ஓடி வந்து விடுவார்கள்.


மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ