| ADDED : ஜூலை 16, 2024 11:57 PM
விழுப்புரம், : விழுப்புரத்தில் பயணிகள் நிழற்குடையின் மேற்கூரை ஷீட்டுகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றதால் பயணிகள் வெயிலிலும், மழையிலும் நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.விழுப்புரத்தில், திருச்சி நெடுஞ்சாலையில் வழுதரெட்டி பகுதியில் தனியார் கல்லுாரி எதிரே பயணிகள் நிழற்குடையின்றி பொது மக்கள் நீண்டகாலம் அவதிப்பட்டு வந்தனர். அந்த பகுதியில், ரவிக்குமார் எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில், ஓராண்டுக்கு முன் 5 லட்சம் ரூபாய் மதிப்பில் பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது.ஏற்கனவே அங்கிருந்த சாலையோர மரங்கள் நெடுஞ்சாலைத் துறையால் வெட்டப்பட்ட நிலையில், வெட்டவெளி பகுதியில் உள்ள அந்த சிறிய நிழற்குடையை மக்கள் பயன்படுத்தி வந்தனர்.ஆனால், மாலை, இரவு நேரங்களில் அந்த பகுதியில், கனரக வாகனங்கள் நிறுத்தப்படுவதால், பொது மக்கள் அங்கு நிற்பதில்லை. இதனை பயன்படுத்தி மர்ம நபர்கள் சிலர், நிழற்குடையின் மேற்கூரையில் உள்ள இரும்பு ஷீட்டுகளை திருடிச்சென்றுள்ளனர்.இதனால், மேற்கூரை இன்றி இருப்பதால் பயணிகள் பயன்படுத்த முடியாத நிலை தொடர்கிறது.இதனை ஆய்வு செய்து, நிழற்குடை இரும்பு ஷீட்டுகளை திருடியவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பதோடு, லாரிகள் நிறுத்தி ஆக்கிரமிப்பதை தடுத்தும், நிழற்குடையை புதுப்பித்து தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.