உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / புதுச்சேரி சாராயம் குடித்த 6 பேர் மருத்துவமனையில் அனுமதி

புதுச்சேரி சாராயம் குடித்த 6 பேர் மருத்துவமனையில் அனுமதி

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே கள்ளச்சாராயத்தை குடித்த 6 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டி தொகுதியை சேர்ந்த வேம்பி மதுரா பூரிகுடிசை கிராமத்தை சேர்ந்தவர்கள் சக்திவேல், 52; பிரபு, 35; கூலி தொழிலாளிகள். இவர்கள் நேற்று முன்தினம் மாலை புதுச்சேரி மாநிலம், மதகடிப்பட்டிற்கு சென்று, அங்கிருந்து சாராயம் வாங்கி வந்து தங்கள் ஊரை சேர்ந்த ராஜா, 37; சுரேஷ் பாபு, 36; பிரகாஷ், 38; காளிங்கராஜ், 47; ஆகியோருடன் சேர்ந்து குடித்துள்ளனர். அன்று இரவு சக்திவேலு உள்ளிட்ட 6 பேருக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டது. உடன் 6 பேரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து கஞ்சனுார் போலீசார் வழக்கு பதிந்து, சிகிச்சை பெற்று வரும் சக்திவேல் உள்ளிட்ட 6 பேரிடம் விசாரித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 65 பேர் இறந்த சம்பவம் பரபரப்பு அடங்குவதற்குள், திருவெண்ணெய்நல்லுாரில் புதுச்சேரியில் இருந்து வாங்கி வந்த கள்ளச்சாராயத்தை குடித்த ஒருவர் இறந்தார். 2 பேர் பாதிக்கப்பட்டனர்.இந்நிலையில், இன்று இடைத்தேர்தல் நடைபெறவுள்ள விக்கிரவாண்டி தொகுதியை சேர்ந்த 6 பேர் புதுச்சேரி சாராயம் குடித்து உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உறவினர்கள் மாயம்

சாராயம் குடித்து பாதித்த 6 பேரும் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளதால், அவர்களை பார்க்க யாரையும் போலீசார் அனுமதிக்கவில்லை. சம்பவம் குறித்த விபரங்களை அறிந்து அவர்களின் உறவினர்களை தேடிச் சென்ற நிருபர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தொகுதியில் இன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சாராயம் குடித்து பாதித்தவர்களின் உறவினர்களை அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட எவரும் சந்திக்காமல் இருக்கும் பொருட்டு, உறவினர்களை, அதிகாரிகள் தலைமறைவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை