| ADDED : மார் 26, 2024 10:22 PM
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டியில் நிலை கண்காணிப்பு குழு சோதனையின் போது, கன்டெய்னர் லாரியை திறக்க டிரைவர் மறுத்ததால் அதிகாரிகள் சீலை உடைத்து சோதனை நடத்தியதால் பரபரப்பு நிலவியது.விக்கிரவாண்டியில் தஞ்சாவூர் சாலை பிரியும் இடத்தில் நேற்று காலை 10:30 மணியளவில் நிலை கண்காணிப்பு குழு அலுவலர் விக்னேஷ் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியாக வந்த கன்டெய்னர் லாரியை சோதனை செய்ய நிறுத்தினர். அப்போது லாரி டிரைவரான போச்சம்பள்ளியைச் சேர்ந்த கார்த்திகேயன், துறைமுகத்திலிருந்து மரப்பலகை ஏற்றிக்கொண்டு சீர்காழி செல்வதாக கூறினார். மேலும் துறைமுகத்தில் வைத்த சீலை அகற்ற முடியாது என அதிகாரிகளிடம் மறுப்பு தெரிவித்தார்.இதனால் சந்தேகமடைந்த நிலை கண்காணிப்பு குழு அலுவலர் விக்னேஷ் லாரியை விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வந்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர்,தாசில்தார் யுவராஜ், உதவி தேர்தல் செலவின பார்வையாளர் ஞானவேல், கூடுதல் உதவி தேர்தல் அலுவலர் ரகுராமன், மண்டல துணை தாசில்தார் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலையில் சீலை உடைத்து திறந்தனர்.லாரியில் மரப்பலகை இருந்தது உறுதி செய்யப்பட்டது. மேலும் டிரைவர் எடுத்து வந்த ஆவணத்தை வணிகவரித் துறை பறக்கும் படை அதிகாரிகளை அழைத்து சரியான ஆவணம்தானா என ஆய்வு செய்து உறுதிப்படுத்திய பின் லாரியை அனுப்பி வைத்தனர்.