விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில், லோக்சபா தேர்தல் கண்காணிப்பின்போது, இதுவரை ரூ.1.42 கோடி மதிப்பில், பணம், மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.விழுப்புரம் மாவட்டத்தில், லோக்சபா தேர்தல் பணிகள் குறித்து, கலெக்டர் பழனி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: விழுப்புரம் மாவட்டத்தில், கடந்த மார்ச் 16ம் தேதி முதல், பறக்கும்படை, நிலையான கண்காணிப்பு குழு உள்ளிட்ட பல குழுக்களின் கண்காணிப்பு பணி தொடங்கி நடந்து வருகிறது.இதுவரை ரூ.98.70 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், ரூ.36.52 லட்சம் மதிப்பில் மதுபாட்டில்களும், ரூ.3.61 லட்சம் மதிப்பில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்களும், ரூ.4.73 லட்சம் பரிசு பொருள்களும் என மொத்தம் ரூ.1 கோடியே 42 லட்சத்து, 62 ஆயிரம் அளவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.தேர்தல் பணியில் 9,436 பேர் ஈடுபட உள்ளனர். அதில், தொகுதிக்குள் பணிபுரியும் ஊழியர்கள் 5,230 பேருக்கு, அந்தந்த ஓட்டுச்சாவடியிலேயே ஓட்டளிக்க இந்த முறை ஏற்பாடு செய்யப்பட்டது. வெளி தொகுதியை சேர்ந்த 3,631 பேருக்கு, தபால் ஓட்டு அளிக்க விண்ணப்பம் வழங்கப்பட்டது. அதில், 3,000 பேர் வரை வாங்கி சென்று, தபால் ஓட்டளித்துள்ளனர். தேர்தல் பணிபுரியும் அனைவருக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதால், நாளை வரை தபால் ஓட்டளிக்கு அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.தேர்தல் பணியில் காவல் துறையினர் 2,679 பேர் வரை ஈடுபட உள்ளனர். அதில், 2,426 பேருக்கு தபால் ஓட்டு வழங்கப்பட்டுள்ளது.மீதமுள்ளவர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. நேரடியாக பூத்தில் ஓட்டளிக்கும் வசதி ஏற்படுத்தியுள்ளது தெரியாத சிலர், தங்களுக்கு தபால் ஓட்டு கிடைக்கவில்லை என கூறி வருகின்றனர். ஒருவரும் விடுபடமாட்டார்கள். 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 35 ஆயிரம் பேர் வரை, வாக்காளர் பட்டியலில் உள்ள நிலையில், 4,100 பேர் தான் விண்ணப்பம் வாங்கி விருப்பம் தெரிவித்தனர். அதில், 3,800 பேர் தபால் ஓட்டளித்துள்ளனர். அதில் 300 பேர் ஓட்டு போடவில்லை என்று, கலெக்டர் தெரிவித்தார்.